
ஏமனில் புனிதவெள்ளி அன்று கேரள பாதிரியாரை சிலுவையில் அறைந்த ஐஎஸ்
சனா: புனித வெள்ளி அன்று ஏமனில் இந்திய பாதிரியார் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிலுவையில் அறைந்து கொன்றுள்ளனர்.
ஏமனில் உள்ள ஏடன் நகரில் அன்னை தெரஸாவின் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் முதியவர்கள் இல்லத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த 4ம் தேதி புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த 15 பேர் பலியாகினர். தீவிரவாதிகள் முதியோர் இல்லத்தில் இருந்த கேரளாவை சேர்ந்த பாதிரியார் தாமஸ் உழுன்னலில் என்பவரை கடத்திச் சென்றனர்.

தாமஸை புனித வெள்ளி அன்று சிலுவையில் அறைந்து கொல்லப்போவதாக அவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் அவர்கள் அறிவித்தபடியே கத்தோலிக்க பாதிரியாரான தாமஸை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டதாக ஆஸ்திரியாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிகள் வைத்திருந்த 4 தீவிரவாதிகள் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவரின் உறவினர் போன்று நடித்து அங்கு சென்றனர். முதியோர் இல்லத்தில் அவர்கள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 4 கன்னியாஸ்திரிகள், ஏமனை சேர்ந்த 2 ஊழியைகள், 8 முதியவர்கள் மற்றும் இல்லத்தின் பாதுகாவலர் பலியானார்.
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் பாதிரியார் சிலுவையில் அறையப்பட்டுள்ளார்.