சவுதிக்கு அணு ஆயுதங்களை தரும் பாகிஸ்தான்.. பாதுகாப்பு டீலில் விஷயமே இதுதான்! இஸ்ரேலுக்கு வார்னிங்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சவுதி இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் உலகெங்கும் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. அதில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தேவைப்பட்டால் சவுதிக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதியிடம் இதுவரை அணு ஆயுதங்கள் இல்லாத நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இது இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தான் பாகிஸ்தான் சவூதி அரேபியா இடையே முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சவுதிக்கு சென்றிருந்த நிலையில், அப்போது தான் இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானை எதாவது ஒரு நாடு தாக்கினால் சவுதி ஆதரவாகக் களத்திற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அணு ஆயுதங்கள்
மேலும், இந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதம் தொடர்பாகவும் ஒரு முக்கியமான பாயிண்டு இருக்கிறது. அதாவது தேவைப்பட்டால் பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டமும் கூட சவூதி அரேபியாவிற்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இப்போது வரை சவுதியிடம் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை. இந்தச் சூழலில்தான் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் தேவைப்பட்டால் சவுதிக்கு வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தை பாகிஸ்தான் போட்டிருக்கிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி சவூதி அரேபியாவிற்குத் தேவைப்பட்டால், பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் வழங்கப்படும்" என்றார். இதன் மூலம் சவூதி அரேபியாவை பாகிஸ்தான் தனது அணுசக்திப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது.
பாகிஸ்தான் சவுதி
இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக ராணுவ ரீதியாகவே நல்லுறவு இருந்த வந்த நிலையில், அது இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றிருப்பதையே இது காட்டுகிறது. மேலும், இது இஸ்ரேலுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் பல ஆண்டுகளாகவே மத்தியக் கிழக்கில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடாக இஸ்ரேல் இருக்கிறது. மேலும், இப்போது மத்தியக் கிழக்கில் குழப்பம் நிலவும் சூழலில், பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
மத்தியக் கிழக்கு குழப்பம்
கடந்த வாரம் தான், கத்தாரில் இருக்கும் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவோம் எனச் சொல்லி அங்கும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்த இஸ்ரேல்- ஹமாஸ் போரால் தங்கள் பாதுகாப்பிற்குச் சிக்கல் ஏற்படுமோ என அரபு நாடுகள் கருதுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பாகிஸ்தான் சொல்வது என்ன!
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சவுதிக்கு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் அமைச்சர் ஆசிப், "பாகிஸ்தானின் அணுசக்தித் திறன் குறித்து ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: நாம் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியபோதே நமக்கு அணு ஆயுதத் திறன் கிடைத்துவிட்டது. அப்போதிருந்து நமது படைகள் தொடர்ந்து பயிற்சி பெற்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து உங்களுக்குக் கேள்விக்கான பதில் என்னவென்றால்.. ஆம், நமது அணு ஆயுதங்கள் தேவைப்பட்டால் சவூதி அரேபியாவிற்கு வழங்கப்படும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனைகளுக்கு சவுதி பல காலமாகவே உதவியிருக்கிறது. ஓய்வுபெற்ற பாகிஸ்தான் பிரிகேடியர் ஜெனரல் ஃபெரோஸ் ஹசன் கான் சமீபத்தில் இது குறித்து வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதாவது அவர், "பாகிஸ்தானுக்கு சவுதி தேவையான நிதி உதவிகளை வழங்கியது. குறிப்பாக மேற்குலக நாடுகள் பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகளை வைத்திருந்தபோது நிதிச் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அப்போது அணுசக்தித் திட்டம் தொடர சவுதி நிதி உதவியது" என்றார்.
பின்னணி
பாகிஸ்தான் அணு ஆயுதங்களைச் சோதனை செய்த போது, அதன் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தன. பல ஆண்டுகளாக இந்தப் பொருளாதாரத் தடைகள் அமலில் இருந்தன. பைடன் அதிபராக இருந்தபோது புதிய அணுசக்தி ஏவுகணைகள் குறித்து சோதனை செய்ததாகச் சொல்லி, பாகிஸ்தான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை பைடன் தரப்பு விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அணு ஆயுதங்களைச் சமாளிப்பதற்காகவே பாகிஸ்தான் தனது அணு ஆயுதத் திட்டத்தை உருவாக்கியது. இப்போது பாகிஸ்தானிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், தற்போது இந்தியாவிடம் சுமார் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications