வேக்சின் போடவில்லை என்றால் கைது மட்டுமில்லை.. 'அதை'யும் செய்வேன்.. மிரட்டும் பிலிப்பைன்ஸ் அதிபர்
மணிலா: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்றால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுதர்தே, தடுப்பூசி போட விரும்பாதவர்களுக்குப் பன்றிகளுக்குப் போடும் வேக்சின்களை போடுவேன் என்றும் அது வைரசையும் கொல்லும் உங்களையும் சேர்த்துக் கொல்லும் மக்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசிகளே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி பேடும் பணிகளை அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் தடுப்பூசி பணிகளை அதி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கைது செய்வேன்
இந்நிலையில் நேற்று அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுதர்தே, "என்னைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாடு இப்போது மிக மோசான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தேசிய அவசரநிலை ஏற்பட்டுள்ள அவசரநிலை இது. நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், கண்டிப்பாக நான் உங்களைக் கைது செய்வேன். வலுக்கட்டாயமாகத் தடுப்பூசி போடுவேன்.

சுமையை அதிகரிக்காதீர்கள்
நாம் ஏற்கனவே கஷ்டத்தில் தான் உள்ளோம். இதுபோன்ற நபர்கள் நம் சுமையை அதிகப்படுகிறார்கள். கைது செய்து, தடுப்பூசி போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், என்னை அப்படிச் செய்யும் நிலைக்கு நீங்கள் தள்ளக் கூடாது. நான் அது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தயங்க மாட்டேன். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் பிலிப்பைன்ஸை நாட்டை விட்டுச் சென்றுவிடுங்கள்.

இந்தியாவுக்குச் சென்றுவிடுங்கள்
இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ எங்கேயாவது சென்றுவிடுங்கள். நம் அனைவரது மூலமும் தடுப்பூசி பரவ வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் கட்டாயம் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும். சில தடுப்பூசி போட விரும்பாத முட்டாள் மக்கள் உள்ளனர். அவர்கள் மூலமே வைரஸ் பரவுகிறது. அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வைரஸ் பரப்புகின்றனர்.

கொன்றுவிடுவேன்
தடுப்பூசி போட விரும்பாதவர்களுக்குப் பன்றிகளுக்குப் போடும் வேக்சின்களை போடுவேன். அது வைரசையும் கொல்லும் உங்களையும் சேர்த்துக் கொல்லும்" என்று தடுப்பூசி செலுத்த விரும்பாதவர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். 11 கோடி மக்கள்தொகையைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications