ரஷ்ய ராணுவத்தில் அதிபயங்கர சிரிய வீரர்கள்! உக்ரைனை குறிவைத்து ரஷ்யா போடும் மாஸ்டர் பிளான்.. பின்னணி
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் 2ஆவது வாரமாகப் போர் தொடரும் நிலையில், உக்ரைன் முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா போட்டுள்ள திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. ரஷ்ய ராணுவத்தின் இந்த போரைக் கண்டு அஞ்சாமல் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து துணிச்சலாகச் சண்டையிட்டு வருகின்றனர்,
இதன் காரணமாகப் போர் 2ஆவது வாரமாகத் தொடர்கிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் இதுவரை எடுத்த முயற்சிகளும் பெரியளவில் பலன் தருவதாக அமையவில்லை,

போர் நிறுத்தம்
இது தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த பிப். 27 மற்றும் மார்ச் 1 என இரு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. அதேபோல இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. அதிலும் எவ்வித பலனும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே உக்ரைன் சரணடையாவிட்டால் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரிய வீரர்கள்
இருப்பினும், சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன் தொடர்ந்து கூறி வருவதால், வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தயாராகி வரும் சூழலில், நகர்ப்புறப் போரில் திறமையான சிரிய நாட்டை சேர்ந்தவர்களை ரஷ்யா தனது ராணுவத்தில் சேர்த்து வருவதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரிய வீரர்களைக் கொண்டு உக்ரைன் நகரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதே ரஷ்யாவின் திட்டமாக உள்ளது.

ரஷ்ய படை
இப்படி எத்தனை சிரிய வீரர்கள் உக்ரைன் நாட்டிற்காகப் போராட ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், சிலர் ஏற்கனவே ரஷ்யாவிற்குச் சென்றுவிட்டதாகவும் அவர்கள் மிக விரைவில் உக்ரைனுக்குள் அனுப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டிற்குள் சென்று சண்டையிடும் வீரர்களுக்கு சிரியா, ரஷ்யா நாடுகள் $200 முதல் $300 டாலர் வரை வழங்கி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளான் என்ன
சிரியா நாட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகிறது. சிரிய அரசை எதிர்த்து அங்குள்ள போராளி குழுக்கள் நகர்ப்புறங்களிலும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகர்ப்புறங்களில் எப்படித் தாக்குதல் நடத்த வேண்டும், எப்படிப் பாதுகாப்பாகப் பின்வாங்க வேண்டும் என்பது தகவல்கள் சிரிய வீரர்களுக்கு நன்கு தெரியும். எனவே, அவர்களை தங்கள் ராணுவத்தில் சேர்த்தால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை எளிதாகக் கைப்பற்றலாம் என்றே ரஷ்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்,
Recommended Video

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
அதேபோல மறுபுறம் இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்கள் உக்ரைனுக்காகப் போராடத் தாயாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் போரில் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என்றே உக்ரைன் தொடர்ந்து கூறி வருகிறது. சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், "உக்ரைன் மக்களை ரஷ்யா கொன்று குவிக்கிறது. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இதற்கான விலையை அவர்கள் கொடுத்துத் தான் ஆக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
