கடும் கிராக்கி: இந்திய பெண்களை வீட்டு வேலைக்கு எடுக்கும் சவுதி அரேபியா
ரியாத்: இந்தியாவில் இருந்து வீட்டு வேலைக்கு பெண்களை பணியமர்த்துவதை துவங்கியுள்ளது சவுதி அரேபியா.
சவுதி அரேபியாவில் 20 லட்சத்து 80 ஆயிரம் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். அதில் 50 ஆயிரம் பேர் வீடுகளில் பணிப்பெண்களாகவும், உதவியாளர்களாகவும், டிரைவர்களாகவும், கிளீனர்களாகவும் வேலை பார்க்கிறார்கள். இதில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
இந்நிலையில் சவுதிக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியது. இதையடுத்து இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் இந்தியா-சவுதி அரேபிய அரசுகள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் சவுதிக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தற்போது சவுதி அரேபியா இந்திய பெண்களை வீட்டு வேலைக்கு எடுக்கத் துவங்கியுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த பணியாளர் ஒப்பந்தத்தில் அப்போதைய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியும், சவுதி அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆதல் பகீஹும் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சவுதியில் பணிப்பெண்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் இந்திய பெண்களை வீட்டு வேலைக்கு எடுக்கிறார்கள்.