பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவிக்கு பேராபத்து.. கட்சிக்குள் அதிகரிக்கும் எதிர்ப்பு.. பரபர தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சிக்குள்ளே எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அவரது பிரதமர் பதவிக்கே இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரசியல் குழப்பம் நிகழ்கிறது. அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியில் உட்கட்சி குழப்பம் தொடர்கிறது.
இதன் காரணமாக அங்கு நடைபெறும் இம்ரான் கான் ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்தவர்களே அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளனர்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டில் நிலவும் அரசியல் அமைதியின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நஜீப் ஹாரூன், நாட்டில் அரசியல் கொந்தளிப்பை முடிவுக்குக் கொண்டுவரப் பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்ய வேண்டும். அவரை தவிர வேறு யாரைப் பிரதமராக கொண்டு வந்தாலும் பிரச்சினை இல்லை.

இம்ரான் கான்
இந்த பிரச்சினையில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கும் இப்போது உள்ள நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர ஒரே வழி. நாடு இனியும் இந்த ஸ்திரமற்ற தன்மையைத் தக்கவைக்க முடியாது. பிரதமர் இம்ரான் கான் தனது பிடிவாதத்தைக் கைவிட வேண்டும், மேலும் கட்சிக்குள் இருந்து வேறு யாரையாவது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். இம்ரான் கான் மீதான அதிருப்தி உட்கட்சியிலேயே அதிகரித்து வரும் நிலையில், இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் தேதி நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான பிடிஐ கட்சிக்கு உட்கட்சி குழப்பம் அதிகரித்து வருகிறது. பல எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும், வரும் காலத்தில் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அக்கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏக்கள் மட்டுமின்றி அக்கட்சியில் இருந்து ஏற்கனவே மூன்று மத்திய அமைச்சர்களும் விலகி உள்ளனர்.

வரும் காலத்தில் சிக்கல்
கடந்த மார்ச் 8ஆம் தேதி பாக். சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், அதில் இருந்து இம்ரான் கான் தப்பிக் கொண்டாலும் கூட உட்கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தப்பி இருந்தாலும் கூட வரும் நாட்களில் பாக், பிரதமர் இம்ரான் கான் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications