இதெல்லாம் ரொம்ப ஓவரு! கதவுக்கு பிங்க் பெய்ண்ட்.. ரூ.19 லட்சம் அபராதம் போட்ட நகராட்சி! ஏன் தெரியுமா
லண்டன்: உங்கள் வீட்டிற்கு உங்களுக்குப் பிடித்த நிறத்தை அடித்ததற்கு எல்லாம் அபராதம் விதித்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் தான் இங்கு நடந்து உள்ளது.
அனைவருமே வாழும் வீடுகளை அலங்கரிக்கப் பார்த்துப் பார்த்து அலங்கரிப்பார்கள். தங்களுக்குப் பிடித்தது போல வீடு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் காட்டும் முனைப்பு மிகப் பெரியது.
வீட்டிற்கு உள்ள சிறு பொருள் எங்கே எப்படி இருக்க வேண்டும் என்பது முதல் வீட்டின் வடிவமைப்பு வரை அனைத்தையும் அவர்கள் பார்த்துப் பார்த்து செதுக்குவார்கள்.

கட்டுப்பாடுகள்
ஆனாலும், எல்லா இடங்களிலும் நாம் நமது வீடுகளை விரும்புவது போல வைத்து இருக்க முடியாது. சில குறிப்பிட்ட ஊர்களில் வீடுகளை இப்படித்தான் வைத்து இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அப்படித்தான் ஸ்காட்லாந்தின் எடின்பரோவிலும் வீடுகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நகரம் 1995இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றது. இதனால் வீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

அபராதம்
இந்த ஊரில் தான் பெண் ஒருவருக்கு 20,000 பவுண்ட், அதாவது 19.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. எடின்பரோவின் நியூ டவுன் பகுதியில் வசிக்கும் 48 வயதான மிராண்டா டிக்சன், கடந்த ஆண்டு தனது வீட்டுக் கதவுகளுக்கு பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்தார். இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நகர சபை வீட்டிற்கு வெள்ளை அல்லது லைட்டான நிறத்தை பெயிண்ட் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இரு ஆண்டுகள்
இருப்பினும், வீட்டின் கதவின் பெயிண்டை மாற்ற வாய்ப்பே இல்லை என மறுக்கும் மிராண்டா டிக்சன் தனக்கு எதிராக யாரோ சதி செய்வதாகவும் கூறுகிறார். சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தச் சிலர் முயல்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், கடந்த 2019இல் தனது பெற்றோரிடமிருந்து இந்த வீட்டைப் பெற்றுள்ளார். அதன் பின்னர் இரு ஆண்டுகள் வீட்டைப் புனரமைத்து உள்ளார்.

பிங்க் நிறம்
கடைசியாக வீட்டின் கதவுக்கு தனக்குப் பிடித்த பிங்க் நிறத்தை அவர் அடித்துள்ளார். இதற்காகத் தான் அவரது வீட்டிற்கு ஃபைன் விதிக்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பெண், "பிரிட்டனில் பிரிஸ்டல், நாட்டிங் ஹில் மற்றும் ஹாரோகேட் போன்ற நகரங்களில் கூட கதவுகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், இவர்கள் கட்டுப்பாடு விதித்து உள்ளார். இதில் என்ன லாஜிக் என்றே புரியவில்லை" என்றார்.

மாற்ற மாட்டேன்
மேலும், பிங்க் நிறத்தில் தனது கதவு இருப்பது பெருமை தான் என்றும் அதை ஒருபோதும் மாற்ற மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நகரில் உள்ள அனைத்து கதவுகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலையில், இவரது வீட்டு கதவு மட்டும் பிங்க் நிறத்தில் உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் பலரும் அவரது வீட்டின் முன் வந்து செல்பி கூட எடுத்துச் செல்கிறார்கள். இது தொடர்பான படங்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

செல்பி
இருப்பினும், அவரது கதவின் நிறத்தை மாற்றியே தீர வேண்டும் என்பதில் நகர சபை உறுதியாக உள்ளனர். இப்போது அவருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில், பிங்க் நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்திற்கு மாற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக எச்சரித்து உள்ளனர். இருப்பினும், இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் வாங்க பாஸ் பிங்க் கதவுக்கு முன்னாடி செல்பி எடுக்கலாம் என கூலாக சொல்கிறார் மிராண்டா டிக்சன்!