ராகுல் காந்தி பாதயாத்திரையில் திருப்பம்! டெல்லி சவுத் ப்ளாக்கே அதிர்ந்ததாமே..காரணம் மாஜி RAW தலைவர்!
லக்னோ: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையில் நாட்டின் வெளியுறவு கொள்கை வகுப்பான RAW என்கிற ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத் பங்கேற்றார். ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் பகிரங்கமாக அரசியல் நடவடிக்கையில் தம்மை வெளிப்படுத்தி இருப்பது டெல்லி வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.

லோக்சபா தேர்தலை மையமாக வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை தொடங்கினார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த யாத்திரையை தொடங்கிவைத்தார்.
இந்த பாதயாத்திரையானது கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் டெல்லியில் சென்றடைந்தது. டெல்லியில் ஒருவார ஓய்வுக்குப் பின்னர் நேற்று 2-ம் கட்ட பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் நோக்கி இந்த பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறது.

இன்றைய யாத்திரையில் ராகுலு காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் இணைந்து கொண்டார். ராகுல் யாத்திரையில் முதுபெரும் அரசியல் தலைவரான ஜம்மு காஷ்மீர் முன்னாள் தலைவர் பரூக் அப்துல்லா இணைந்து கொண்டார். ராகுலையும் பிரியங்காவையும் ஆரத்தழுவி தமது ஆதரவை வெளிப்படுத்தினார் பரூக் அப்துல்லா.

அதேபோல் நாட்டின் ரா அமைப்பின் முன்னாள் தலைவரான அமர்ஜித் சிங் துலாத், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து பாதயாத்திரையில் இணைந்து கொண்டார். ரா அமைப்பு என்பது ரகசியமான செயல்பாடுகளைக் கொண்டது. நாட்டின் வெளியுறவு கொள்கை தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கக் கூடிய, தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியது. அந்த அமைப்பின் முன்னாள் தலைவரான துலாத், ராகுல் காந்திக்கு பகிரங்கமான ஆதரவு தெரிவித்துள்ளார். இது டெல்லி அரசு வட்டாரங்களை ரொம்பவே அதிரவைத்திருக்கிறது என்கின்றன தகவல்கள்.












Click it and Unblock the Notifications