பயங்கரவாதிகளிடம் அனுதாபம் காட்டும் அகிலேஷ்..சைக்கிளில் குண்டு வைத்த தீவிரவாதிகள்-பிரதமர் மோடி பேச்சு
லக்னோ : சமாஜ்வாதி கட்சி பயங்கரவாதிகளிடம் அனுதாபம் காட்டுவதாகவும், பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற அக்கட்சியின் தலைமையிலான முந்தைய அரசாங்கம் முயன்றதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி பிரச்சாரம்
பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாதி கட்சியையும் அக்கட்சியின் தலைவருமாகிய அகிலேஷ் யாதவையும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், " "சைக்கிள்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன என சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் தேர்தல் சின்னமான 'சைக்கிள்' ஆகியவற்றை கேலி செய்தார். ஆரம்ப நாட்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில், வெடிகுண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தன, பயங்கரவாதிகள் ஏன் சைக்கிள்களை தேர்வு செய்தார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

தீவிரவாதிகளுக்கு அனுதாபம்
மேலும் சமாஜ்வாடி கட்சி பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற சமாஜ்வாதி தலைமையிலான முந்தைய அரசாங்கம் முயன்றதாகவும் கூறினார். நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் ரத்தத்தால் பூமி சிவந்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது என்ற அவர், இரத்தத்தில் நனைந்த மண்ணை எடுத்து எனது அரசாங்கம் இந்த பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் என்று 'சங்கல்ப்' (சபதம்) எடுத்தேன் என ஆவேசமாக பேசினார்.

அகமதாபாத் குண்டுவெடிப்பு
அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை நடந்து வருவதால், இத்தனை ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். இன்று, நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை வழங்கியதும், இந்த விஷயத்தை நான் நாட்டின் முன் கூறுகிறேன் என்ற பிரதமர், நம்மை அழிக்க நினைத்தவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். நீங்கள் அனைவரும் அறிவீர்கள், தீவிரவாத தாக்குதல் நடக்கும் போதும், தீவிரவாதம் அதிகரிக்கும் போதும், அதிகபட்ச இழப்பு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தான் ஏற்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பொதுமக்களின் வாழ்க்கை, வர்த்தகம் மற்றும் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

அகிலேஷ் மீது குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்ததும், 2006-ஆம் ஆண்டு வாரணாசியில் உள்ள சங்கத் மோகன் கோயில் மற்றும் கான்ட் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஷமிம் அகமது மீதான வழக்கைத் திரும்பப் பெற முந்தைய அரசாங்கம் முயற்சித்தது என்ற பிரதமர், "2007ல், அயோத்தி மற்றும் லக்னோ நீதிமன்ற வளாகங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. 2013ல், சமாஜ்வாதி அரசு, தாரிக் காஸ்மி மீதான வழக்கை வாபஸ் பெற்றது. ஆனால், சமாஜ்வாதி அரசின் சதியை நீதிமன்றம் அனுமதிக்கவில்லை, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications