உ.பி முதல்வர் விமர்சனத்திற்கு பதில் - வால்மீகி கோவிலை துடைப்பத்தால் சுத்தம் செய்த பிரியங்கா
உத்தரபிரதேச மாநிலத்தில் தலித்துகள் வசிக்கும் காலனிக்கு சென்ற பிரியங்கா, துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். மேலும், இது எளிமை மற்றும் சுயமரியாதையின் சின்னம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
லாக்னௌ: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று லக்னோவில் தலித்துகள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று மகரிஷி வால்மீகி கோவிலை சுத்தம் செய்தார். துடைப்பத்தால் சுத்தம் செய்த பிரியங்கா, இது எளிமை மற்றும் சுயமரியாதையின் சின்னம் என்றும் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் சாதிய ரீதியாக பேசி தனது தலித்-விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் போது கார் மோதிய விபத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கக் சென்ற பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சித்தாப்பூர் விருந்தினர் மாளிகையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டபோது அங்குள்ள அறையை சுத்தம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதற்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்து இருந்தார்."மக்கள் அவர்களை இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள தகுதியுள்ளவர்களாக மாற்ற விரும்புகின்றனர். அதற்குதான் அவர்களை உருவாக்கியுள்ளனர். மற்றவர்களுக்கு தொல்லை தருவதற்கும் எதிர்மறை கருத்துகளை பகிர்வது மட்டுமே இவர்களின் பணி. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தில், "சனிக்கிழமையன்று, வால்மீகி கோவில்களில் சுத்தம் செய்யும் பணிகளை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட குழுக்கள் மேற்கொள்ளும்" என பதிவிட்டிருந்தார்.
அதன்படி இன்று தலித்துகள் வசிக்கும் காலனிக்கு சென்ற பிரியங்கா, துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். மேலும், இது எளிமை மற்றும் சுயமரியாதையின் சின்னம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் மக்களுடன் உரையாடிய பிரியங்கா, "இப்படி விமரிசித்து அவர் (யோகி) என்னை அவமானப்படுத்தவில்லை. சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு ஊழியர்களாக உள்ள கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளை அவமானப்படுத்தியுள்ளார்.
உங்கள் அனைவருடன் சேர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள இங்கு வந்துள்ளேன். துடைப்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்வது சுயமரியாதைக்கான செயல் என்பதை யோகிக்கு தெரியப்படுத்தினேன். உத்தரப் பிரதேச முதல்வர் சாதிய ரீதியாக பேசி தனது தலித்-விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர், "லவ் குஷ் நகரில் மக்களுடன் மக்களாக சேர்ந்து மகரிஷி வால்மீகி கோவிலை பிரியங்கா சுத்தம் செய்தார். நாட்டில் கோடிக்கணக்கான மக்களும் தூய்மை பணியாளர்களும் துடைப்பத்தை எடுத்துதான் சுத்தம் செய்கின்றனர் என பிரியங்கா குறிப்பிட்டார். பின்னர், கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications