கைதிகளுக்கு சுவையான உணவு வழங்கிய 'வார்டன்'.. சுத்து போட்டு மோசமாக அடித்த போலீஸார்.. 'பரபர' வீடியோ
லக்னோ: சிறைக் கைதிகளுக்கு சுவையான, தரமான உணவு வழங்கிய காரணத்துக்காக வார்டன் ஒருவரை சக போலீஸார் சரமாரியாக தாக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
"கைதிகளுக்கு மோசமான உணவை கொடுக்க சொன்னால் கேட்க மாட்டியா" எனக் கூறி அந்த வார்டன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீஸார் 5 பேரை சிறை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
வார்டனை போலீஸார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உபி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

நேர்மையான வார்டன்
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் மாவட்ட சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சிறைச்சாலையின் பொறுப்பாளராக (வார்டன்) முகேஷ் துபே (39) இருந்து வருகிறார். மிகவும் நேர்மையானவர் என பெயர் பெற்ற முகேஷ் துபே, சிறைக் கைதிகளுக்கு சட்டம் கொடுத்திருக்கும் உரிமைகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். இவ்வாறு நேர்மையாக இருந்ததால் அவர் பொறுப்பில் இருக்கும் சிறைச்சாலைகளில் மற்ற அதிகாரிகள் அரசாங்கம் கொடுக்கும் பணத்தை கையாடல் செய்ய முடியாது. இதனால் உயரதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் முகேஷ் துபே, பல சிறைச்சாலைகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரேபரேலி மாவட்ட சிறைச்சாலைக்கு முகேஷ் துபே பணிக்கு வந்தார்.

கைதிகளுக்கு சுவையான உணவு
இங்கு அவர் பொறுப்பேற்றதுமே, கைதிகளுக்கு அதுவரை மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை போராடி பெற்றுத் தந்தார். அங்கு கைதிகளுக்கு தரப்பட்டு வந்த வறட்டி போன்ற சப்பாத்தியையும், வெறும் தண்ணீரை போல தரப்பட்ட பருப்பு தாலையும் பார்த்து மனம் நொந்த முகேஷ் துபே, அரசாங்கம் கொடுக்கும் பணத்தை யாரையும் கையாடல் செய்ய விடாமல் தடுத்து, அதன் மூலம் சுவையான உணவுகளை கைதிகளுக்கு தருவதற்கு ஏற்பாடு செய்தார்.

கேண்டீன் விற்பனை பாதிப்பு
சிறையை பொறுத்தவரை அங்கு வரும் பணக்கார கைதிகள், சிறை உணவு சரியில்லாவிட்டால் கேண்டீனில்தான் உணவு வாங்கி சாப்பிடுவார்கள். சிறை கேண்டீனில் உணவு விலை மிக மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக, 2 சப்பாத்தி ஒரு குருமாவுக்கு ரூ.400 வரை விலை இருக்கும். இந்நிலையில், முகேஷ் துபே வார்டனாக வந்தததில் இருந்து கைதிகளுக்கு சுவையான தரமான உணவு வழங்கப்படுவதால் யாரும் கேண்டீன் பக்கம் போகவில்லை. இதனால் சிறை கேண்டீனில் விற்பனை சரிந்துள்ளது.

கொலைவெறி தாக்குதல்
இதனால் கேண்டீனை நிர்வகிக்கும் சக போலீஸ் அதிகாரிகள், முகேஷ் துபே மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். அவரிடம் சிறை உணவை மோசமாக தயாரிக்கும்படியும் கூறி மிரட்டியும் வந்தனர். ஆனால், அவர்களின் மிரட்டலுக்கு முகேஷ் அடிபணியவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் 5 போலீஸார் முகேஷை வெளியே அழைத்து வந்து, "கைதிகளுக்கு சுவையான உணவு கொடுக்காதே எனக் கூறினால் கேட்க மாட்டாயா" எனக் கூறி கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. தொடர்ந்து, மற்ற போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பூதாகரமானதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உபி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். முகேஷ் மீது தாக்குதல் நடத்திய 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications