விஜய் கட்சி தொடங்கியதை எளிதாக எடுக்ககூடாது.. அலர்ட் செய்த திமுக.. அமைச்சர் மூர்த்தி கூறிய தகவல்
மதுரை: நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நாம் நமது வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் மூர்த்தி மதுரையில் நடந்த திமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசியுள்ளார்.
நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ‛தமிழக வெற்றிக் கழகம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்பிறகு நிர்வாகிகளை நியமனங்களை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 19 ம் தேதி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து கம்பத்தில் ஏற்றி வைத்தார்.
கொடியின் மேல்புறத்தில் சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழ்புறத்தில் சிவப்பு உள்ளது. இதில் நடுவில் உள்ள மஞ்சள் நிறத்தில் இரண்டு யானைகளும், வாகை மலரும், வாகை மலரை சுற்றி சிறிய நட்சத்திரங்களும் ரவுண்ட்டாக இடம் பெற்றுள்ளது. வாகை மலர் பழங்கால தமிழர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. போரில் வெற்றி பெற்றவர்கள் சூடும் வாகை மலரை விஜய் தனது கொடியில் வைத்துள்ளதாக விஜய் தரப்பு கூறும் நிலையில் இந்த கொடி பல்வேறு விஷயங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துவதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி அடுத்த மாதம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளதை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது என்று திமுகவில் இருந்து குரல் வந்துள்ளது.
அதாவது மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மதுரையில் திமுகவை பலப்படுத்துவது பற்றியும், நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு அமைச்சர் மூர்த்தி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இப்போது இருந்தே நாம் ஒன்றை செய்ய வேண்டும். ஏனென்றால் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். விஜய் கட்சி தொடங்கி உள்ளதை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது. நாம் நமது வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும். இதற்கான பணிகளை தொடங்கி மேற்கொள்ள வேண்டும். கூட்டணி கட்சியினரை நம்மால் நமது கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திருமங்கலம் பகுதியில் திமுகவினர் சிலர் மாற்றி ஓட்டளித்துள்ளனர். ஆனாலும் நாம் 40க்கு 40 என்று வெற்றி பெற்றுள்ளோம். இதன்மூலம் தமிழகம் மிகப்பெரிய பெருமையை பெற்றுள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல முதல்வர் ஸ்டாலின் இலக்கு வைத்துள்ளார். இதற்கு நாம் உழைக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications