உதயநிதி செங்கலை தொட்டதுமே விலை ‘விர்ருனு’ கூடிருச்சு.. எல்லா கட்டணமும் உயருது- செல்லூர் ராஜூ அட்டாக்
மதுரை : உதயநிதி ஸ்டாலினின் ராசியோ என்னவோ எப்போது அவர் செங்கலை தூக்கி காண்பித்தாரோ அன்றே செங்கல், ஜல்லி என கட்டுமான பொருட்கள் எல்லாமே விலை கூடி விட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு, எந்தப் பணியும் நடைபெறாமல் இருந்ததால், ஒற்றைச் செங்கலைக் காட்டி கடந்த தேர்தல்களின்போது பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அதனை விமர்சித்து இப்போது பேசியுள்ளார் செல்லூர் ராஜு.
மேலும், திமுகவில் எம்ஜிஆர் சேர்ந்த பிறகுதான் அந்தக்கட்சியின் கொள்கைகளை படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பரப்பினார். சாதாரண நபரான கருணாநிதியை தலைவராக கொண்டு வந்தவர் எம்ஜிஆர் எனப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

திமுகவை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்
அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. நேற்று மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "எம்ஜிஆர் கட்சி தொடங்கமால் இருந்திருந்தால் அண்ணா இருந்தார், வரலாறு படைத்தார், சாதனைகள் செய்தார் என தெரியாது. எம்ஜிஆர் திமுகவுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். திமுகவை வளர்த்தவர்.

கருணாநிதியை தலைவராக்கியவர் எம்.ஜி.ஆர்
திமுகவில் எம்ஜிஆர் சேர்ந்த பிறகுதான் அந்தக்கட்சியின் கொள்கைகளை படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பரப்பினார். எம்ஜிஆர் சுடப்பட்டதால் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்காமல் திமுகவுக்கு வாக்களித்தனர். சாதாரண நபரான கருணாநிதியை தலைவராக கொண்டு வந்தவர் எம்ஜிஆர். தன்னை திமுக தலைவராக்க வேண்டும் என எம்ஜிஆரிடம் பேசியவர் கருணாநிதி. எளிய குடும்பத்தில் பிறந்தவன் எனக்கூறி மக்களுக்காக உழைப்பேன் எனச் சொல்லி தன்னை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கருணாநிதி எம்ஜிஆரிடம் கேட்டார்.

அவர் போல இனி ஒருவர் கிடையாது
எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, தனியாக கட்சி தொடங்கவில்லை. திமுகவுக்கு எதிராகச் செயல்படவில்லை. மக்கள் தான் கூடி அவருக்கு ஆதரவு அளித்தனர். அதன் பிறகு தான் அண்ணாவின் பெயரையும் படத்தையும் வைத்து கட்சியை தொடங்கினார். எம்ஜிஆர் போல மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர் இனி வரப்போவதில்லை.

நின்றால் வரி நடந்தால் வரி
மின் கட்டணத்தை உயர்த்த மாட்டேன் என வாக்குறுதி அளித்து வாக்குகளையும் வாங்கிவிட்டு மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திவிட்டது. திமுக அரசு நடந்தால் வரி, நின்றால் வரி, சும்மா இருந்தலும் வரி போடுவார்கள். இந்த ஆட்சியில் யாருமே சுபிட்சமாக இல்லை. மக்கள் பேசாமல் இருப்பதால் மஞ்சள் குளிக்கிறார்கள். இப்போது தேர்தல் இல்லை என திமுகவினர் நினைக்கின்றனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது.

யாரும் வரல
அதிமுக அரசு மக்களுக்காக கொண்டு வந்த மினி கிளினிக் திட்டத்திற்கு திமுக அரசு மூடு விழா நடத்திவிட்டது. இதற்கு பதிலாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிவித்தார்கள். ஆனால் எந்த ஒரு மருத்துவரும் வீடு தேடி வரவில்லை. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசுக்கு சரியான பதிலடியை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

உருட்டல் மிரட்டல் எல்லாம் பார்த்தாச்சு
ரெய்டால் அதிமுகவை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு நரி. சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். குண்டுக்கே அஞ்சாத தலைவர் வழியிலும், நெஞ்சுரம் கொண்ட தலைவியின் வழியிலும் வந்தவர்கள் அதிமுகவினர். கருணாநிதி காலத்திலேயே மிரட்டல் உருட்டல் அதிகாரத்தை பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் ஒருநாளும் பயப்பட மாட்டோம்.

உதயநிதி ராசி
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து எனக் கூறி இப்போதும் மக்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கிறது திமுக அரசு. உதயநிதி ஸ்டாலின் என்று செங்கலை தூக்கி காண்பித்தாரோ அன்றே செங்கல் விலையெல்லாம் உயர்ந்துவிட்டது. உதயநிதியின் ராசியோ என்னவோ செங்கல், ஜல்லி என கட்டுமான பொருட்கள் எல்லாமே விலை கூடி விட்டது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications