தமிழகத்தையே உலுக்கிய கோகுல் ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை!
சாதி மாறி பழகியதாக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ். கடந்த 7 ஆண்டு காலமாக ஆணவப்படுகொலை வழக்கில் யுவராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை: ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாதி ஆணவக் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
கோகுல்ராஜ் கொலை நடந்த 2015 ஜூன் 23 முதல் தீர்ப்பு வாசிக்கப்படும் 2022 மார்ச் 8 வரை பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. மர்ம கிரைம் திரைப்படம் போல இந்த வழக்கு கடந்து வந்துள்ளது.
கொலை வழக்கை விசாரித்த அதிகாரி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கின் பின்னணி, வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

கோகுல்ராஜ்
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
கோகுல்ராஜ் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஈரோடு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். கோகுல்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டுவந்தார்கள். 27ஆம் தேதி பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. குற்றவாளிகளைப் பிடித்தால்தான் உடலை வாங்குவோம்' என்று கூறி உடலை வாங்க உறவினர்கள். அதையடுத்து 6 பேரைக் கைதுசெய்தார்கள். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 2ஆம் தேதி உடலைக் கொடுத்தார்கள். இதனையடுத்து கோகுல்ராஜ் உடலை பெற்றோர்கள் வாங்கி அடக்கம் செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்
இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜில் பதிவாகியிருந்தது. அதுவே இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக மாறியது.

விஷ்ணுப்பிரியா விசாரணை
வழக்கில் தொடர்புடைய தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வப்போது ஆடியோவும் வெளியிட்டார் யுவராஜ். இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குக் காரணம் யுவராஜ்தான் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது.

யுவராஜ் பேட்டி
டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்றும், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் அந்த பேச்சுக்களில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் யுவராஜ். தலைமறைவாக இருந்தாலும் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் அவரது பேட்டி வெளியானது வாரமிருமுறை இதழும் வாட்ஸ் அப் மூலம் அவரிடம் பேட்டி கண்டு வெளியிட்டது.

100 நாட்களுக்குப் பின் யுவராஜ் சரண்
திடீரென நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைய உள்ளதாக கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் யுவராஜ். 100 நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபார் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார்.இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பின்பு, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் ரத்து
கடந்த 2015 டிசம்பர் 25ஆம் ஆண்டு யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019ஆம் ஆண்டு வழக்கு விசாரணை
இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
கோகுல்ராஜ் வழக்கில் சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்ற கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

யுவராஜ் ஆஜர்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் போது அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். நீதிமன்ற கூண்டில் நின்று விசாரணைக்கு பதில் கூறினாலும் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே பதில் சொல்லி விட்டு செல்வார் யுவராஜ். இதை பார்த்த கோகுல்ராஜின் உறவினர்கள் ரத்தக்கண்ணீர் வடிப்பார்கள்.

தண்டனை அறிவிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் எனவும் தண்டனை விபரம் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 5 பேரை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
Recommended Video

சாகும் வரை ஆயுள் சிறை
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்துள்ளார். சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல யுவராஜின் கார் டிரைவருக்கும் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்துள்ளார். வழக்கு விசாரணை 7 ஆண்டுகள் நடைபெற்றாலும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications