மாபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது.. உளரும் நபர்.. பிடிஆர் கடும் தாக்கு
மதுரை: மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறும் நபர். அவருடைய கேள்விக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது என்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காட்டமாக தெரிவித்தார்.
Recommended Video
நாளை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் எதுவும் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேநேரம் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர், கடும் நிதிசிக்கலில் தமிழகம் இருப்பதை சுட்டிக்காட்டினார். எனவே வரிகள் உயருமா என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக சொத்துக்கள்
இந்நிலையில் சென்னை செல்லும் முன்பு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் 'தமிழ்நாட்டில் அதிக சொத்து வளங்கள் இருப்பதால்தான் கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஒருகோணத்தில் பார்த்தால் இதுகூட வளர்ச்சிதானே' என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளதாக செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

உளரும் நபர்
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ''பலமுறை கூறியுள்ளேன் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. அநாவசியமாக வாய்க்கு வந்ததை எல்லாம் உளறும் நபர். மாஃபா பாண்டியராஜனின் வரலாற்றைச் சொல்கிறேன்.

எ.வ. வேலு
எ.வ. வேலு, '7வது ஊதிய குழுவிற்கு நிதி ஒதுக்கியுள்ளீர்களா' என்ற கேள்வியை அப்போதைய நிதியமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கேட்டார். அதற்கு '7வது ஊதிய குழுவிற்கு இன்னும் டெல்லியில் இருந்தே விதிமுறை வரவில்லை. நாங்கள் ஒரு பரிந்துரைக் குழு வைக்க வேண்டும், அதன்பிறகு தகவல் எடுக்க வேண்டும். அதன்பின்தான் ஒதுக்கமுடியும். எனவே இது பொறுப்பற்ற கேள்வி' என ஓபிஎஸ் பதிலளித்தார்.

உளறும் நபர்
அதே கூட்டத்தில் இரண்டு மணிநேரம் கழித்து, 'நிதி பற்றாக்குறைக்குக் காரணம் 7வது நிதிக்குழுவுக்கு ஊதியத்தை உயர்த்திவைத்திருக்கிறோம்' என்று மாஃபா பாண்டியராஜன் சொல்கிறார். இதற்கு மேல் ஒரு உதாரணம் தேவையா? அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறும் நபர் மாஃபா பாண்டியராஜனின் கேள்விக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது .

சமூக நீதி
பொருளாதாரத்தில் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்பது உண்மை. நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நீதிக் கட்சி வந்ததாலும், எல்லோருக்கும் கல்வியைக் கொண்டுவந்து, சமூக நீதி அடிப்படையில் அனைவருக்குமான ஏற்றத் தாழ்வைக் குறைத்ததாலும் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக உள்ளது. அந்த வளர்ச்சிக்கும் மாஃபா பாண்டியராஜனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பெட்டிக்கடை பாட்டில்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் எங்கோ பெட்டிக் கடையில் உள்ள பாட்டிலுக்கும் உள்ள சம்பந்தம்தான் மாஃபா பாண்டியராஜனுக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ளது. அதாவது சம்பந்தமே கிடையாது. மாஃபா பாண்டியராஜனின் கேள்விக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது" இவ்வாறு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications