திருமணமான 2வது நாளே மனைவியை கொன்ற கணவன்! பழி வாங்க கூலிப்படையை ஏவிய பெண் வீட்டார்.. பரபரக்கும் மதுரை
மதுரை: கர்ப்பிணி மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமினில் வந்தவரை கொல்வதற்காக பெண் வீட்டார் அரிவாளுடன் துரத்தி உள்ளனர்.
பெண் வீட்டார் துரத்தியதில் அலறி அடித்து ஓடியவர் உயிர் பிச்சைக் கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த ராயபுரத்தை சேர்ந்த கிளாடிஸ்ராணி என்பவரும் அவனியாபுரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜோதிமணி காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து நெருங்கி பழகியதால் தான் கர்ப்பம் ஆனதாகவும், கிளாடிஸ்ராணி வீட்டில் தெரிவித்துள்ளார். ஆனால் காதலியை கரம்பிடிக்க மனமில்லாத ஜோதிமணி திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

மிரட்டித் திருமணம்
கிளாடிஸ்ராணியை திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் வீட்டார் ஜோதிமணியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியுமின்றி மனமுமின்றி காதலித்த பெண்ணையே கரம்பிடித்தார் ஜோதிமணி. இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் திருமணமான 2வது நாளே கிளாடிஸ்ராணி எரித்து கொல்லப்பட்ட நிலையில் முட்புதரில் சடலமாக கிடந்தார்.

கணவர் கைது
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிளாடிஸ் ராணியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கணவர் ஜோதிமணியை பிடித்து விசாரணை செய்ததில் தனக்கு விருப்பம் இன்றி கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகக் கூறினார். அந்த விரக்தியில்தான் கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இதனால் பெண்வீட்டார் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து ஜோதிமணி சோழவந்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றம் ஜோதிமணியின் ஜாமின் மனுவை விசாரித்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க உத்தரவிட்டது.

மர்ம கும்பல் துரத்தியது
நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் சோழவந்தான் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார் ஜோதிமணி. வழக்கம்போல் இன்று காவல்நிலையம் வந்த ஜோதிமணியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். அவரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வழிமறித்தது அந்த மர்மக் கும்பல். பின்னர் அவரை வெட்டுவதற்காக அரிவாளை தூக்கியபோது உடனடியாக அங்கிருந்து ஓடினார் ஜோதிமணி.

பழிக்குப்பழி
மர்மக் கும்பல் ஓட ஓட விரட்ட உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய ஜோதிமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார். இதை பார்த்தவுடன் அரிவாளுடன் வந்த கும்பல் தப்பித்து ஓடியது. உடனடியாக போலீசார் துரத்தியபோதும் அவர்களை பிடிக்க முடியவில்லை. தன்னை மனைவியின் வீட்டார்தான் தீத்துக் கட்ட கூலிப்படையை அனுப்பி உள்ளதாக ஜோதிமணி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications