உச்சத்தில் கொரோனா பரவல்.. மீண்டும் லாக்டவுன்- மராட்டிய அரசு அதிரடி.. பிற மாநிலங்களுக்கு ஓர் வார்னிங்
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வார இறுதி நாட்களிலும் இரவு நேரங்களிலும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மரபணு மாறிய வைரஸ் காரணமாகவே வைரஸ் பரவல் அதிகரித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததும் வைரஸ் பரவல் அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆட்டம் போடும் கொரோனா.. 4000ஐ நெருங்கும் வைரஸ் பாதிப்பு.. தேர்தலுக்கு பின் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

மீண்டும் லாக்டவுன்
குறிப்பாக, மராட்டியத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி தினசரி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு லாக்டவுன் கடைப்பிடிக்கப்படும். அதேபோல வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவை மூடப்பட்டிருக்கும்
இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. அதன்படி ஒரு இடத்தில் ஐந்து அல்லது அதிகமானவர்கள் ஒன்றுகூடக் கூடாது. மால்கள், உணவகங்கள், பார்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல வழிபாட்டுத்தளங்களையும் மூட அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் அனுமதி
உணவகங்களில் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் தொட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் பார்வையாளர்களின்றி தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற அனைத்தும் மூடப்படும்.

போக்குவரத்து முடக்கம்?
போக்குவரத்தில் எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், அரசு போக்குவரத்து சேவைகள் 50% இருக்கைகளுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார். அதைத்தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் சனிக்கிழமை மட்டும் 49,447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து மராட்டியத்தில் ஒரு நாளில் பதிவான கொரோனா வழக்குகளில் இதுதான் அதிகம். தற்போது அங்கு சுமார் 4 லட்சம் பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 37 ஆயிரம் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.