இது ED கூட்டணி ஆட்சிதான்.. யாரையும் பழிவாங்க மாட்டேன்.. பொடிவைத்து பேசிய பட்னாவிஸ்!
மும்பை: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின் நான் திரும்பி வருவேன் என்று கூறிய போது சிலர் என்னை கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது சொன்ன சொல்லை காப்பாற்றியுள்ளேன் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக திடீரென சிவசேனா எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினர். சில வார போராட்டத்திற்கு பின், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவி விலகினார். இதனைத்தொடர்ந்து ஆளுநரை கோஷ்யாரியை சந்தித்து, ஆய்சியமைக்க ஏக்நாத் ஷிண்டே மற்றும் பட்னாவிஸ் இருவரும் உரிமை கோரினர். பின்னர் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்-ம் பதவியேற்றனர்.

சபாநாயகர் தேர்வு
தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். பின்னர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் 2 நாட்கள் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா சட்டசபை சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் அதிருப்தி சிவசேனா-பாஜக கூட்டணி சார்பாக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

வாக்கெடுப்பு
பின்னர் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 164 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாகின. அதேபோல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் 22 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மன்னிப்பு
இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மகா காடி விகாஸ் கூட்டணி ஆட்சி செயற்கையாக அமைந்தது. நான் திரும்பி வருவேன் என்று கூறி இருந்தேன். அப்படிச் சொன்ன போது பலர் என்னைக் கேலி செய்தார்கள். ஆனால் நான் கூறியது போல இன்று திரும்பி வந்ததுடன், என்னுடன் ஏக்நாத் ஷிண்டேவையும் அழைத்து வந்துள்ளேன். என்னை கேலி செய்தவர்களை நான் பழிவாங்கமாட்டேன். நான் அவர்களை மன்னித்துவிடுகிறேன்.

பட்னாவிஸ் பேச்சு
ஏனெனில், அரசியலுக்கு இது சரிவராது. அரசியலில் எதிரிகளின் குரலுக்கு செவிசாய்க்க அனைவரும் தயாராக வேண்டும். அறிக்கைகள், சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டதற்காக மக்களை சிறையில் அடைக்கிறார்கள். நமக்கு எதிராக பேசுபவர்களுக்கு பதில் அளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு நாம் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சில எம்எல்ஏ-க்கள் எங்களை ED கூட்டணி ஆட்சி என்று கோஷம் எழுப்பினர். ஆமாம் நாங்கள் ED ஆட்சியை தான் அமைத்துள்ளோம். ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் இணைந்த கூட்டணி என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications