மும்பை “நாயகன்” எல்லோருக்கு தெரியும்.. “நாயகி” தெரியுமா.? யார் இந்த கங்குபாய்..? ரியல் ஹீரோயின்..!
மும்பை : "கங்குபாய்" என்ற பெயர் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதுமாக பேசப்படும் பெயராகவும், பேசு பொருளாகவும் மாறியிருக்கிறது. யார் இந்த கங்குபாய் ? கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் வேலுநாயக்கர் போலவே மும்பை நகரின் மையப்பகுதியில் கோலோச்சிய ஒரு நிஜ " நாயகி" என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி போன்ற வரலாற்று திரைப்படங்களை இயக்கிய பாலிவுட்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பாக கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
மும்பையின் நிழல் உலக தாதாக்கள் பற்றி ஆயிரம் படங்கள் வந்து இருந்தாலும் அவை அனைத்துமே நாயகர்களை "நாயகர்களாக" கொண்டாடிய படங்கள் என்பதே உண்மை. அந்த படங்களில் நாயகி ஒன்று இறந்து விடுவார் அல்லது இரண்டு பாடலுக்கு நடனமாடுவார்.

கங்குபாய் கத்தியவாடி
ஆனால் ஒரு பாலியல் தொழிலாளியாக தனது வாழ்வை ஆரம்பித்து மும்பை அரசியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு ஒரு பெண் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியாது. அப்படி ஒருவர் இருந்தார் அவர் பெயர் தான் கங்குபாய் கத்தியவாடி. குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு பகுதியில் பிறந்தவரான கங்குபாய், அவரது பெற்ரோர் அவருக்கு வைத்த பெயர் கங்குபாய் ஹர்ஜுவன்தாஸ். மிகவும் பணம் கொழிக்கும் குடும்பத்தில் பிறந்த இவர் கிட்டத்தட்ட ஜமீன் போல வளர்ந்தவர். அவரது குடும்பத்தில் இருந்த அனைவரும் சமூகத்தின் செல்வாக்காய் வாழ்ந்தவர்கள். சொல்லப்போனால் அந்த ஊரிலேயே மரியாதைக்குரிய குடும்பமாக கங்குபாய் குடும்பம் இருந்தது.

பாலியல் தொழில்
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவரான அவர் மும்பை நிழல் உலகில் மாஃபியா தலைவர்களில் ஒருவராக தனது 20 வயதிலேயே எப்படி மாறினார் என்பதை தான் கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் விளக்குகிறது. அலியா பட் இந்த திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். வரலாற்றில் சொல்லப்படாத பக்கங்களைக் கொண்ட கங்குபாய் வரலாற்றை எடுப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. காதலனை நம்பி மும்பைக்கு சென்ற கங்குபாய் 500 ரூபாய்க்காக பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார். சொல்லமுடியாத கொடூரங்களுக்கு ஆளானவர் பின்னர் மும்பை மட்டுமல்லாது இந்தியாவின் பிரதமராக இருந்த நேருவையே நேரில் சந்திக்கும் அளவுக்கு எப்படி பிரபலமானார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கரு.

பெண் தாதா
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட கங்குபாய் முதலில் தான் எந்த குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்து மிக்க மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் காலம் வேறுமாதிரியாக சிந்தித்தது . வழக்கமான பாலியல் தொழிலாளிகளை போலவே கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் அடிகளுக்கும் ஆட்பட்டு பின்னர் வேறு வழியில்லாமல் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என கருதி அரை மனதோடு பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார். அரசியல்வாதிகள் முதல் உள்ளூர் ரவுடிகள் வரை அவரைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் மும்பையில் பிரபல தாதா ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரை தனது சகோதரராக கருதியிருக்கிறார் கங்குபாய். அவரது கையில் ராக்கி கட்டி தனது சகோதரனாகவே ஏற்றுக் கொண்டார்.

மும்பையின் பிரமுகர்
ஒருநாள் உள்ளூர் ரவுடி ஒருவர் அவரிடம் தகராறு செய்ய அப்பகுதியை தனது ஆளுகையின் கீழ் வைத்திருந்த தாதா ஒருவர் அவருக்கு ஆதரவாக அந்த ரவுடியை அடித்து துவம்சம் செய்து கங்குபாய் தான் இனி எல்லாம் அவரிடம் ஏதாவது தகராறு செய்தால் இதே நிலைமைதான் உங்களுக்கும் என எச்சரித்து விட்டுச் செல்ல அதன் பிறகுதான் கங்குபாயின் கை ஓங்கியிருக்கிறது. நாளடைவில் பாலியல் தொழில் மையமாக இருந்த அந்தப் பகுதியின் தலைவராகவே கங்குபாய் உருவனார். அரசியல்வாதிகள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை காங்குபாய்க்கு கட்டுப்பட்டு தங்கள் காலத்தை தள்ளும் நிலைமைக்கு வந்தனர். ஒரு கட்டத்தில் தனது பெயரோடு தான் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பகுதியான கத்தியவாடி பெயரையும் சேர்த்து கங்குபாய் கத்தியவாடி என மாற்றிக் கொண்டார்.

பெண்களுக்காக போராட்டம்
அதன் பின்னர் பாலியல் தொழிலாளர்களுக்கான அவர் நடத்திய ஒரு போராட்டம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது. தன்னைப் போல வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட, அந்த காலத்தில் பிரதமராக இருந்த நேரு அவரை நேரில் வரவழைத்து பேசியது வரலாற்றில் இடம்பெற்றது. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த கங்குபாய் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார் .

நிஜ நாயகி
இதையடுத்து இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளரான ஹுசைன் சைதி கங்குபாய் குறித்த தகவல்களை திரட்டி "மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை" என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகம் தவிர கங்குபாய் குறித்த தகவல்கள் எதிலும் இல்லை. ஆனாலும் கங்குபாய் இப்பெயர் இன்னமும் மும்பையின் பல பகுதிகளில் உச்சரித்துக் கொண்டு தான் இருக்கிறது. நீங்க நல்லவரா கெட்டவரா என்பதை போல அவர் வாழ்க்கைப் பயணம் இருந்தாலும், பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தன்னை போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடியவர் நிஜவாழ்க்கையில் ஒரு நாயகிதான் இந்த "கங்குபாய்".












Click it and Unblock the Notifications