நாமக்கல் என்கவுண்டரில் சிக்கிய பல்வால் கொள்ளையர்கள்! யார் இவர்கள்? கேரளா ஏடிஎம் கொள்ளையின் பின்னணி
நாமக்கல்: கேரளாவில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை குறிவைத்து ரூ.68 லட்சம் கொள்ளையடித்து தப்பிய கும்பலை நாமக்கல் போலீசார் இன்று என்கவுண்ட்டர் செய்தனர். இதில் ஒருவர் இறந்த நிலையில் இன்னொருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் உள்பட 6 பேர் போலீசில் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரின் புறநகர் பகுதியில் உள்ள 3 எஸ்பிஐ ஏடிஎம்களில் இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஒரு கும்பல் கொள்ளையடித்தது. முகமூடி அணிந்து ஏடிஎம் மையத்துக்குள் செல்லும் நபர் கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடிக்கிறார். அதன்பிறகு ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் கட்டரால் வெட்டிய கும்பல் பணத்தை கொள்ளையடித்தது.

மொத்தம் 3 ஏடிஎம்களில் இருந்து ரூ.68 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த பணத்துடன் அந்த கும்பல் வெள்ளை நிற காரில் தப்பித்து செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. கேரளா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தமிழகத்துக்கு தப்பித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தமிழக போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே தான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஒரு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் பிற வாகனங்கள் மீது மோதிவிட்டு சென்றது. இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று நிற்காமல் சென்ற கண்டெய்னரை விரட்டி சென்றனர். வெப்படை என்ற இடத்தில் போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரியில் இருந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இருப்பினும் போலீசார் லாரியின் முன்பகுதியில் இருந்த 5 பேரை கைது செய்தனர். அதன்பிறகு கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது லாரியின் கண்டெய்னரில் சத்தம் வந்ததால் அதனை திறக்கும்படி கூறப்பட்டது.
தோப்புக்காடு பகுதியில் லாரி நிறுத்தப்பட்டது. கண்டெய்னரை திறந்து பார்த்தபோது உள்ளே 2 பேர் இருந்ததோடு ஒரு கார், கட்டுக்கட்டாக பணமும் இருந்தது. இதையடுத்து அவர்கள் போலீசாரை பார்த்ததும் அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் போலீசார் பாதுகாப்பு கருதி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜூமான் என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். அதேவேளையில் அஷ்ரூ என்பவர் காலில் குண்டு காயமடைந்தார்.
இதையடுத்து ஜூமான் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அஷ்ரூவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஷ்ரூ உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் இருந்த பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல் கண்டெய்னரில் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரளாவின் திரிச்சூரில் ஏடிஎம்களில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்கள் கார்களில் ஏடிஎம்களில் கொள்ளையடித்ததும், அதன்பிறகு அந்த காரை லாரியின் கண்டெய்னருக்குள் ஏற்றி தப்ப முயன்றதும் தெரியவந்தது. அதாவது போலீசார் காரை வைத்து தேடும்போது கண்டெய்னர் மூலம் அவர்கள் தப்பிக்க நினைத்ததும் தெரியந்தது.
மேலும் தற்போது கைதானவர்கள், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதாவது ஹரியானா மாநிலத்தின் பல்வால் மாவட்டத்தையும், நூ மாவட்டத்தையும் சேர்ந்தவர். இவர்கள் இணைந்து தான் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் எஸ்பிஐ ஏடிஎம்மை மட்டுமே டார்க்கெட் செய்து கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது. 1995 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் தனியார் உள்ள வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்தது.
இந்த கொள்ளை பவாரியா கொள்ளை கும்பல் வீடுகளில் உள்ளவர்களை கொன்று கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் லாரியில் சொந்த ஊர்களுக்கு தப்பித்து செல்வார்கள். அப்படி ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடித்த பல்வால் கொள்ளையர்கள் பவாரியா கும்பலை போல் கண்டெய்னரில் காரை ஏற்றி தப்ப முயன்று சிக்கியது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications