அண்ணன் தம்பியான ஐரோப்பா - இந்தியா.. அமெரிக்கா திடீரென சமாதானம் ஆனது ஏன்? இது தான் காரணமா?
நியூயார்க்: இந்தியா - அமெரிக்கா இடையே ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையே சமீபத்தில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பிறகு வெளியாகியுள்ளதால், அதற்கான பதிலடியாகவே அமெரிக்கா இந்த நகர்வை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது. இதனால் உலக நாடுகள் மீதான இந்தியா குறித்த பார்வையும் மாறியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் பல சிக்கல்கள் இருந்தன. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் துணிகள், மருந்துகள், தொழில்துறை பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதையும் அமெரிக்கா விரும்பவில்லை. இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிராக கூடுதல் வரி விதிப்புகளும் அமலில் இருந்தன.

ஐரோப்பிய ஒன்றியம்
இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் ஒரு முக்கியமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டின. பல ஆண்டுகளாக நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தரப்பும் பெரும்பாலான பொருட்களுக்கு வரிகளை படிப்படியாக பூஜ்ஜியமாகக் குறைக்க ஒப்புக்கொண்டன. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா உலக வர்த்தகத்தில் தனிமைப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின.
இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்
இந்த நிலையில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். அவரது அறிவிப்பின்படி, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வந்த முக்கிய இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும். மேலும், ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட கூடுதல் வரியும் முழுமையாக நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
அதோடு, 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவிலிருந்து வாங்க இந்தியா சம்மதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதித்து வந்த வரி மற்றும் வரியல்லாத தடைகள் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக ஊடக பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேட் இன் இந்தியா தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் வரி குறைக்கப்படுவது இந்திய தொழில் துறைக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய எண்ணெய்
இதனை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து இன்னும் சில கேள்விகள் நிலவுகின்றன. இந்தியா உண்மையில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? 500 பில்லியன் டாலர் கொள்முதல் எந்த காலக்கெடுவுக்குள் நடைபெறும்? இந்தியா குறைக்கவுள்ள வரிகள் எவை? போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
வர்த்தக ஒப்பந்தம்
மொத்தத்தில், இந்த வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்கா உலக வர்த்தக அரசியலில் மீண்டும் எழுச்சி பெற எடுத்த முயற்சியாகவும், இந்தியா மேற்கத்திய நாடுகளுடன் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் வெளியாகும் போது தான், இதன் உண்மையான தாக்கம் தெளிவாக தெரிய வரும். அதே நேரத்தில் அமெரிக்கா எதற்காக இந்த ஒப்பந்தத்தை திடீரென அறிவித்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications