ஹிஜாப் விவகாரம்.. "எங்கள் நிலைப்பாடு இது தான்.." பளிச் என விளக்கிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார்
பாட்னா: கர்டாகடாவில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதலில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலில் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு கிளம்பியது.
அங்குள்ள பல பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லீம் பெண்களை சில கல்லூரிகளில் உள்ளே அனுமதிக்கவும் மறுத்தது.

ஹிஜாப் விவகாரம்
அதேபோல அங்கு இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கல்லூரிகளில் இந்துத்துவ மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வரத் தொடங்கினர். இதனால் அங்குப் பல பகுதிகளில் கல்லூரிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் கர்நாடக ஹைகோர்ட்டில் ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிதீஷ்குமார்
இந்நிலையில் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார், "இங்கு எங்கள் மாநிலத்தில் அனைத்து விதமான மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். இங்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை. வகுப்பறையில் தலையை மறைக்கும் வகையிலான ஆடையை யாராவது அணிந்தால் இது குறித்துக் கண்டிப்பாகக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. இதுபோன்ற விஷயங்களை நாம் பெரிதுபடுத்தக் கூடாது. இது பயனற்றது. இப்போது இது தொடர்பாகக் கர்நாடக ஐகோர்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான ஆடைகள்
பீகார் பள்ளிகளில், குழந்தைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஆடைகளை அணிவார்கள். இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். அனைவரது மத உணர்வுகளையும் நாங்கள் மதிக்கிறோம். மாநில அரசுக்கு அனைவரும் சமம்" என்று அவர் தெரிவித்தார், பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடகாவில் பாஜக தலைவர்கள் தான் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்து வருகின்றனர்.

எப்படித் தொடங்கியது
கடந்த டிசம்பர் மாதம் கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் தான் இந்த ஹிஜாப் விவகாரம் தொடங்கியது. அப்போது முஸ்லீம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒரு சில இந்து மாணவர்கள் கல்லூரிக்குக் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கினர். அப்போது தான் இந்த பிரச்சினை அடுத்தகட்டத்திற்குச் சென்றது. இன்று மாநிலத்தில் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரப் பள்ளிகள் அனுமதிக்கவில்லை.












Click it and Unblock the Notifications