நாராயணசாமி அரசு தப்புமா? பெரும்பான்மையை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
புதுச்சேரி: சட்டசபையில் வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். துணை நிலை ஆளுநராக பதவியேற்ற முதல்நாளிலேயே முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கடியான உத்தரவினை பிறப்பித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரி அரசியல் களம் படுபரபரப்பை எட்டியுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நமசிவாயம், எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், எம்.எல்.ஏ மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 மாநில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யவே, நாராயணசாமி அரசுக்கு சிக்கல் எழுந்தது. காரணம் பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் ஆளும் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுக்கு தற்போது 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் புதுச்சேரி முதல்வராக நீடிக்க தகுதியற்றவர் நாராயணசாமி என்று எதிர்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர். உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சித்தலைவர் என். ரங்கசாமி வலியுறுத்தினார். அதிமுக எம்எல்ஏ அன்பழகனும் முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
முதல்வர் பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறினார் முதல்வர் நாராயணசாமி. சட்டசபையில் எங்களின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார். இதனிடையே துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார்.
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவேன் என்றும் எதிர்கட்சியினர் தன்னை சந்தித்து நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கடிதம் அளித்துள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே முதல்வர் நாராயணசாமி துணை நிலை ஆளுநரை சந்தித்து பேசினார்.
இந்த சூழ்நிலையில் வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பதவியேற்ற முதல் நாளிலேயே அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். சட்டசபையில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு நடைபெறும் போது அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் - தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி சட்டசபையில் உள்ள 30 இடங்களில் திமுக காங்கிரஸ் கட்சியின் பலம் 19 ஆக இருந்தது. பாகூர் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததை அடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து 4 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்ததை அடுத்து ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் பலம் 14 ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணியில் உள்ள திமுக 3 எம்எல்ஏக்கள், ஒரு சுயேட்சையின் ஆதரவு என ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால் புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன உறுப்பினர்கள் 3 பேர் என்று எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி அரசு தப்புமா? கவிழுமா என்பது வரும் 22ஆம் தேதி தெரிந்து விடும்.