ஸ்டாலின் பேசுவதெல்லாம் ‘போங்கு’.. ‘ஊராட்சி’ தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. கொந்தளித்த எச்.ராஜா!
புதுக்கோட்டை : தமிழகத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்டாட்சி நடைபெறுகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கச்சத்தீவை விரைவில் மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்து தமிழக முதல்வர் அதற்கு உரிமை கொண்டாட ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் என பாஜக தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

முதல்வர் ‘போங்கு’
புதுக்கோட்டைக்கு வருகை தந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை 9 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுவிட்டது. தமிழக நிதியமைச்சரும் நிலுவை எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு ரூ.14 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இருப்பதாக பேசினார் ஸ்டாலின். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அத்தனையுமே 'போங்கு' என்பது இதிலிருந்து உறுதியாகிறது. எதிலும் கவனம் கொள்ளாமல் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பதை எல்லாம் முதல்வர் படித்து விடுவதா? ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு
மேலும் பேசிய எச்.ராஜா, "கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும்தான் அருகதை உண்டு. ஏனென்றால் 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்த்தபோது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பா.ஜ.க தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்திதான். அதை நாடாளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான். தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

ஊராட்சி தலைவர் ஸ்டாலின்
அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தினார். கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு 'ஊராட்சி தலைவர்' அதாவது முதல்வருக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை.

தமிழுக்கு திமுக எதுவும் செய்யவில்லை
தமிழ் மொழியை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை திமுக கைவிட வேண்டும். தமிழ் மொழிக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை. மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதைத்தான் பாஜக செய்து வருகிறது. பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.

பாஜக இலக்கு
பாஜகவின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்துக் கூறுவது தான் பாஜகவின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் திமுக கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பாஜகவின் போராட்டங்கள் தொடரும். ஒன்றரை இலட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொல்லப்பட்டபோது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான். அதுதான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக்கொண்டு உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேர்தலும் ஒன்றாக
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட லாக்கப் படுகொலைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்டாட்சி நடந்து வருகிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும். 24 மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications