ராமலிங்க பிரதிஷ்டை விழா.. ராவண வதம்..இலங்கை மன்னனாக விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
ராமலிங்க பிரதிஷ்டை இரண்டாம் நாள் திருவிழா இலங்கையின் மன்னனாக விபீஷணனை அறிவித்து பட்டாபிஷேக நிகழ்வு கோதண்டராமர் கோயிலில் நடைபெற்றது.
ராமேஸ்வரம்: இலங்கையின் மன்னனாக விபீஷணனை அறிவித்து பட்டாபிஷேக நிகழ்வு ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி ஆலயம் பித்ரு தோஷம் போக்கும் ஆலயமாக திகழ்கிறது. புராண கால சிறப்பு மிக்க இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது.
இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு புனித தீர்த்தங்களில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டு வருவார்கள். அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் திதி கொடுக்கவும் பித்ரு கடன் தீர்க்கவும் ஏராளமானோர் ராமேஸ்வரம் செல்வதுண்டு.
ராமாயண இதிகாசத்தோடு தொடர்புடைய இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மூன்று நாட்கள் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்ற விழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது.

பிரம்மஹத்தி தோஷம்
சீதையை சிறையெடுத்துக்கொண்டு இலங்கை சென்ற ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார் ராமர். ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வழிபட வேண்டும் என்று முனிவர்கள் கூறினர். சிவ பூஜைக்குரிய லிங்கத்தைக் கொண்டு வர அனுமனிடம் கேட்டுக்கொண்ட ராமர், கடலில் தோஷம் நீங்க நீராடி முடித்தார். சிவலிங்கம் கொண்டு வரச்சென்ற அனுமன் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வழிபட வேண்டும் என்பதால் கடற்கரை மணலில் சீதையால் பிடிக்கப்பட்ட மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

சிவலிங்க வழிபாடு
தாமதமாக வந்த அனுமன், சிவலிங்க பூஜை முடிந்ததைக் கண்டு கோபமடைந்தார். மணல் லிங்கத்தை வாலினால் கட்டி இழுத்தார் அது முடியவில்லை. உடனே அனுமரை சமாதானப்படுத்திய ராமர், தனக்காக அனுமர் கொண்டு வந்த விஸ்வநாதர் லிங்கத்திற்கு பிரதான பூஜைகள் செய்த பிறகே சீதை மணலில் செய்த ராமநாதர் லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படியே தற்போதும் பூஜைகள் நடைபெறுகிறது.

ராமேஸ்வரம்
ராமபிரானால் பூஜிக்கப்பட்ட இந்த லிங்கமே ராமநாதசுவாமியாகவும், ராமர் ஈஸ்வரனை வணங்கியதாலேயே இத்தலத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயர் வந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் விழாவே ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவாக ஆண்டு தோறும் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலையில் திட்டக்குடி துர்க்கை அம்மன் கோயில் அருகே ராவணசம்ஹாரம் நடைபெற்றது.

ராவண வதம்
ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர் லட்சுமணன் ரத வீதி வழியாக வீதி உலா வந்து திட்டக்குடியில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்வில் பத்து தலைக் கொண்ட ராவணன் ராமரை மூன்று முறை வலம் வந்த பின்பு ராமர் தன்னுடைய கையில் இருந்த ஆயுதத்தால் ராவணனை வதம் செய்தார்.

விபீஷணர் பட்டாபிஷேகம்
இந்த நிலையில் நேற்று ராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து விபீஷணர் புறப்பாடாகி ராமர் தீர்த்தத்தில் ராமர் லட்சுமணர் மற்றும் சீதா தேவியை அழைத்துக்கொண்டு தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்றார். நேற்று கோயில் நடை காலை 8 மணி அளவில் சாத்தப்பட்டது பின்பு இரவு 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பிற்பகல் ராமர் இலங்கை மன்னனாக விபிஷனரை அறிவித்து பட்டம் கட்டப்பட்டு பின் குடத்தில் இருந்த புனித நீரைத் தெளித்து பட்டாபிஷேக நிகழ்வு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

ராமலிங்க பிரதிஷ்டை விழா
இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவுபெற உள்ளது. அர்ச்சகர் ஒருவர் சிவலிங்கத்தை சுமந்தபடி முதல் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கருவறையில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்து ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும்.












Click it and Unblock the Notifications