பசும்பொன்னில் 'தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா'.. அரசியல் தலைவர்கள் நேரில் மரியாதை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடந்து வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், அமைப்பு தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி 29 மற்றும் 30 தேதி என 3 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.

ஜெயந்தி விழா
அதன்படி நடப்பு ஆண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. பொதுவாக, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில், நாள்தோறும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன. இதில், இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இன்று குரு பூஜை
அதன்படி கடந்த 28-ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும், 29-ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30-ஆம் தேதி குருபூஜை விழாவாகவும் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவர்.

முதல்வர் ஸ்டாலின்..
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று பசும்பொன் வருவதாக இருந்தது. ஆனால் நேற்று முன் தினம் இரவு ஆஸ்பத்திரியில் செக்-அப் செய்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் நீண்ட தூர பயணம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் மு.க ஸ்டாலினின் நேற்றைய பசும்பொன் பயண திட்டம் ரத்த செய்யப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் தேவர் நினைவிடத்தில் இன்று நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.இதற்காக மதுரை ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை லாரி மற்றும் கனகர வாகனங்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணி
தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி செல்லும் சாலைகளில் செல்ல அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக அப்பகுதிகளில் போலீசர் தடுப்புகள் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications