தென்படாத நோன்பு பெருநாள் பிறை - வளைகுடா, ஐரோப்பிய நாடுகளில் மே 2 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை
ரியாத்: ஈகை திருநாள் பிறை தென்படாத காரணத்தால் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மே 2 ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு இருந்து வருகிறது.
அரபுகளின் பிறை ஆண்டின் 9 வது மாதமான ரமலானை புனித மாதமாக கருதும் உலக இஸ்லாமியர்கள் அதில் பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம்.

ரமலான் நோன்பு
ரமலான் பிறை ஒன்று முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருந்து வருகின்றனர். அப்போது உண்ணாமல், பருகாமல், தவறான வார்த்தைகளை பேசாமல், எந்த பாவமான காரியங்களிலும் ஈடுபடாமல் இருந்தால் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய சட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு நோற்று வருகின்றனர்.

ஒருநாள் தாமதமாக தமிழகத்தில் ரமலான்
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் 2 ஆம் தேதி பிறை பார்த்து அன்று முதல் ரமலான் நோன்பை நோற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் ரமலான் பிறை ஏப்ரல் 3 ஆம் தேதி தென்பட்டதை அடுத்து தலைமை காஜியால் நோன்பு அறிவிக்கப்பட்டது.

28 நோன்பு நிறைவு
அன்று முதல் இன்று வரை 28 நாட்கள் நோன்பை தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் நோற்று இருக்கின்றனர். அதிகாலை 29 வது நோன்பை நோற்கும் அவர்கள், நாளை மாலை இஃப்தாரில் நோன்பு திறந்த பின்னர் வானில் பிறை பார்ப்பார்கள். பிறை தென்பட்டால் 29 நோன்போடு ரமலானை முடித்துவிட்டு ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகை பெருநாளாக கொண்டாடுவார்கள்.

வெளிநாடுகளில் தென்படாத பிறை
அந்தவகையில் இன்றுடன் அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 29 நோன்பை நிறைவு செய்த இஸ்லாமியர்கள் வானில் பிறையை பார்த்தனர். ஆனால், எங்கும் பிறை தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சவூதி அரேபிய அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஈத் பிறை தென்படாத காரணத்தால் ரமலான் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து மே 2 ஆம் தேதி ஈகை பெருநாள் கொண்டாடப்படும் என அறிவித்து உள்ளது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளிலும் பிறை தென்படாததால் மே 2 ஆம் தேதி ஈகை திருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈகை திருநாள்
இஸ்லாத்தில் மொத்தம் 2 பண்டிகைகள் உள்ளன. ஒன்று ஈகைத் திருநாள் என்று அழைப்படும் நோன்புப் பெருநாள். மற்றொன்று தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாள். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல்நாள் கொண்டாடுவதாகும். அந்நாளில் ஏழைகளுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை அவர்கள் வழங்குவது வழக்கம்.

தியாகத் திருநாள்
அதேபோல், தியாகத் திருநாள் என்பது துல் ஹஜ் மாதம் பிறை 10-ல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்போது கொண்டாடுவதாகவும். அந்நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து கறிகளை ஏழைகள், உறவினர்களுக்கு வழங்குவார்கள்.