44 கூட தேவையில்ல.. “ஆட்டையாம்பட்டிக்கு வந்து பாருங்க” - திரண்ட கூட்டம்.. ‘பலம்’- உற்சாகமான எடப்பாடி!
சேலம் : எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தின் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கூடிய கூட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.
தங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது எனச் சொல்பவர்கள் எல்லாம் ஆட்டையாம்பட்டிக்கு வந்து பாருங்கள் என மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வத்தை வம்புக்கு இழுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கட்சியில் தனது பலத்தை நிரூபிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தியுள்ள நிலையில், தற்போது பொதுக்கூட்டங்கள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார் ஈபிஎஸ்.

உற்சாகமடைந்த ஈபிஎஸ்
இந்நிலையில், அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது திரண்டிருந்த கூட்டத்தில் உற்சாகமடைந்த ஈபிஎஸ், திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஆட்டையாம்பட்டியில் வந்து பாருங்க
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த மண் ஒரு ராசியான மண். சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்டையாம்பட்டி என்றால் அது அதிமுகவின் கோட்டை. ஆட்டையாம்பாட்டி பேரூராட்சி பகுதியில் எந்தத் திசை நோக்கினாலும் கடல் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. சிலர் சொல்கிறார்கள், தங்களுக்கு தொண்டர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்று. அவர்கள் எல்லாம் இங்கே ஆட்டையாம்பட்டியில் வந்து பாருங்கள்." என்றார்.

44 அமாவாசை கூட தேவையில்லை
மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும், சேலத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சேலத்திற்கு ஒரு அமைச்சர் போட்டிருக்கிறார்கள். அவர் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. இன்னும் 44 அமாவாசைகள் தான் திமுக ஆட்சிக்கு உள்ளன. 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் 44 அமாவாசைகள் கூட காத்திருக்க தேவையில்லை.

கானல் நீர் தான்
நிறைய பேர் பொறாமைப்படுகிறார்கள். எத்தனை முறை உடைந்தாலும் இந்தக் கட்சியை எதுவும் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறார்கள். எந்தக் காலத்திலும் அதிமுகவை உடைக்க முடியாது. அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற கனவு கண்டால் கானல் நீராகத்தான் இருக்க முடியும். சில கறுப்பு ஆடுகள் திமுகவிற்கு துணை போகிறார்கள். அவர்களின் முயற்சி பலிக்காது. அவர்கள் யாரென்று வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறோம்.

டெய்லர் வீட்டிலும்
தற்போது அதிமுக தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். மாவட்ட நிர்வாகிகள் மீது மட்டுமல்லாமல் அதிமுக நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்துகிறார்கள். திமுகவை போல அதிமுகவினர் கொள்ளையடித்து பணம் சேர்க்கவில்லை. சேலத்தில் இளங்கோவன் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவருக்கு நெருக்கமானவர் என பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் டெய்லராக உள்ள அவர் வீட்டிலும் சோதனை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறையினர் மிரட்டுகிறார்கள்.

நான் யாரையும் பழிவாங்கவில்லை
இதன் மூலம் அதிமுகவை மிரட்ட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா போல பல சோதனைகளை எதிர்கொண்டு ஆட்சிக்கு வந்தவன் நான். அதேபோல மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். நான் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆட்சி நடத்தவில்லை. யாரையும் பழிவாங்கவில்லை. மாற்றுக் கட்சி, எதிர்க்கட்சியினரை பழிவாங்கவில்லை" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications