அமித்ஷாவை சந்தித்த ஸ்டாலின்.. "இப்போ எந்த காவடியை தூக்கிட்டு போனீங்க".. எடப்பாடி பழனிசாமி ஒரே போடு
எடப்பாடி பழனிசாமி திமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளார்
சேலம்: எங்களை பாஜகவின் அடிமை என்று திமுகவில் சொன்னாங்களே.. இப்போது யாருக்கு யார் அடிமை என்பதை மக்களே பார்த்து கொள்ளட்டும்.. டெல்லியில் பிரதமரை நாங்கள் சென்று பார்த்தபோது காவடி தூக்கியதாக சொன்னவர்கள், இப்போது எந்தக் காவடியை தூக்கி கொண்டு டெல்லி சென்றார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக கடந்த வாரம் 4 நாள் பயணமாக டெல்லி சென்றார்.
அங்கு பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்த முதல்வர், நீட் தேர்வு விலக்கு, ஜிஎஸ்டி நிலுவை தொகை, எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேரிலும் வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், டெல்லிக்கு தமிழக உரிமைகளை கேட்டு பெறுவதற்காகவே வந்ததாகவும், அதிமுகவைப் போல் மத்திய அரசுக்கு காவடி தூக்க வரவில்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்... சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசலில் அதிமுக சார்பில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

எடப்பாடி காட்டம்
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சொன்னதாவது: "அதிமுக அரசு இருந்தபோது வீட்டு வரி, சொத்து வரி போன்றவை உயர்த்தப்படவில்லை... ஆனால், இப்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு திட்டமிட்டு வீட்டு வரி, சொத்து வரிகளை உயர்த்தி இருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

காவடி தூக்குகிறார்
மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொத்து வரி, மக்களின் சொத்தை பறிக்கும் வரியா என்று கேட்டார்... இந்த வார்த்தையை அவருக்கு சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும்... இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டது... இளைஞர்களின் எதிர்காலத்தை இந்தப் போதைப்பொருள் பயன்பாட்டால் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது... போலீஸ் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் மெத்தனப் போக்கில் இருக்கிறார். அதனால், போதை பொருள் புழக்கமும் அதிகமாகிவிட்டது.

பாதுகாப்பு துறை
அன்றைக்கு எங்களை பார்த்து ஸ்டாலின் என்ன சொன்னார்? அதிமுக அரசு அடிமை அரசாக இருக்கிறது.. டெல்லிக்கு காவடி தூக்குகிறார்கள் என்றெல்லாம் ஸ்டாலின் பேசினாரே.. இப்போது அவர் டெல்லி சென்று பிரதமரை பார்த்திருக்கிறார்... உள் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சரை பார்த்து இருக்கிறார்... தமிழ்நாட்டுக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்... ஆனால், நாட்டின் பிரதமர் தமிழகத்துக்கு வரும்போது கோபேக் மோடி என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

யாருக்கு யார் அடிமை
இன்று முதல்வரான பிறகு டெல்லி சென்று 2 முறை சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகம் வளர்ச்சிப் பாதை கொண்டு செல்ல உழைத்தோம்... அதனால், நல்ல திட்டங்கள் வந்தன. நாங்கள் சென்று பார்த்தபோது காவடி தூக்கியதாக சொன்னாங்களே, இப்போது இவர்கள் எந்த காவடியை தூக்கி கொண்டு சென்றார்கள்? யாருக்கு யார் அடிமை என்பதை மக்களே பார்த்து கொள்ளட்டும்.

தங்கம் தென்னரசு
ஒரு பாரத பிரதமரை கொச்சைப்படுத்துகின்ற அளவுக்கு, இழிவுபடுத்துகின்ற அளவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாத ஒருவர் என்றால் அது ஸ்டாலின் தான். தமிழ் மண்ணிற்கு வருகின்ற பொழுது அனைவரையும் வரவேற்றுதான் பழக்கம். ஆனால் அந்த நாகரிகம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்பொழுதுமே கிடையாது. அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு டெல்லியில் கிடைத்ததாம். அது பொறுக்கமுடியாமல் எடப்பாடி பழனிசாமி இப்படி விமர்சிக்கிறார் என்கிறார்.

விமர்சனம்
எப்படி வரவேற்பு கிடைத்தது என்று மக்களுக்கு தெரியும்.. ஆட்களை ஒன்று திரட்டி வந்து இவர்களே ஒரு செயற்கையான கூட்டத்தைக்கூட்டி அதில் அவர்களுக்கு ஒரு புகழை தேடிக் கொள்கிறார்கள்... அதில் எங்களுக்கு ஒரு சங்கடமும் கிடையாது... ஆனால் பாதுகாப்புதுறை அமைச்சரை பார்த்துவிட்டு அவர் மிகப் பெரிய மரியாதை கொடுத்தார், கார் வரை வந்து வழியனுப்பி விட்டுச் சென்றார் அப்படி எல்லாம் பேசுகிறார்கள்.. அப்படி இருக்கின்ற மத்திய அரசை ஏன் வசைபாட வேண்டும்'' என்றார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications