ஜெயலலிதா கார் டிரைவர் மரண வழக்கு.. தீவிரமாகும் விசாரணை.. சிக்க போகும் முக்கிய புள்ளிகள்?
சேலம்: தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் கையில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணா பகதூர் என்ற மற்றொரு காவலாளியின் கை, கால்களை கட்டிப் போட்டு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணிபுரிந்த கனகராஜ் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு
மற்றொரு நபரான சயான் என்பவரும் கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். சினிமா காட்சியை விட பரபரப்பாக நகரும், இந்த எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் அதிதீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

தனியாக விசாரணை
இதில் கனகராஜ் மரணம் விபத்தல்ல; திட்டமிட்ட கொலை என்று அவரது சகோதரர் தனபால்ன் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். இதனால் இந்த வழக்கை சேலம் மாவட்ட காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தினார்கள். மேலும் ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு விசாரணை நடைபெற்றது.

உறவினர்களிடம் விசாரணை
தற்போது நீதிமன்ற அனுமதி பெற்று கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சேலம் காவல்துறையினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். எடப்பாடியில் வசித்து வரும் கனகராஜின் அண்ணன் தனபாலை இன்று காலை சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும்,. கனகராஜின் உறவினர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் சேலம் டிஐஜி மகேஸ்வரி நேரில் விசாரணை நடத்தினார்.

கூடுதல் தகவல்கள்
கனகராஜ் மரணம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் காவல்துறையினர் மீண்டும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆகவே கனகராஜ் மரணம் தொடர்பாக கூடிய விரைவில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications