For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் ஆட்சிமாற்றம்: கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் கட்டுப்பாடு தளருமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழா 28ஆம் தேதி தொடங்குகிறது. ஆரம்பத்தில் நடத்தப்பட்டதுபோல் கோலாகலமாக இந்த ஆண்டு நடத்தப்படுமா என இலங்கை தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ (12 கடல் மைல்) தொலைவில், 205 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் சொத்தாக இருந்து வந்த கச்சத்தீவில் சங்கு எடுக்கும் உரிமையினை தமிழகத்தை சேர்ந்த பலருக்கு வழங்கியிருந்தனர். அவ்வாறு சங்கு எடுக்க சென்ற மீனவர் சீனிகருப்பன் படையாச்சி என்பவர் கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோயிலை உருவாக்கினார். அங்கு ஆண்டு தோறும் மார்ச் மாதம் திருவிழாவும் நடத்தப்பட்டு வந்தது.

Kachchatheevu St.Antony fest will start on 28 of this month

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் கச்சத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதும், வலைகளை உலர்த்துவதும் என இருந்து வந்த நிலையில் 1920ஆம் ஆண்டு இலங்கை கச்சத்தீவை சொந்தம் கோரியது. தொடர்ந்து சேதுபதி மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு 1947ல் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் வாயிலாக இந்திய அரசு வசமாகியது. அரசின் வசம் ஆன பின்பும் கச்சத்தீவிற்கு இருநாட்டு மீனவர்கள் செல்வதிலும், அங்கு திருவிழா நடத்துவதிலும் பிரச்னைகள் ஏதும் எழவில்லை.

இதன்படி மார்ச் மாதம் 10 நாட்கள் அங்கு நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள இந்திய மீனவர்கள் நாட்டுப்படகுகளில் செல்வர். தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பண்டமாற்று முறையில் பொருட்களை மாற்றிக்கொள்வதும் அங்கு நடக்கும்.

இந்நிலையில், இந்திய கட்டுப்பாட்டில் இருந்து வந்த கச்சத்தீவு முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருநாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவில் தங்கள் வலைகளை உலர்த்தி ஓய்வு எடுத்து கொள்ளவும், ஆண்டு தோறும் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் ஏதும் இன்றி பங்கெடுத்து கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதனால் 1974க்கு பின்னரும் கச்சத்தீவு திருவிழா வழக்கம் போல் நடந்து வந்தது.

இந்நிலையில், 1983ல் இலங்கையில் ஏற்பட்ட இன கலவரத்தில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதனை காரணம் காட்டி கச்சத்தீவு திருவிழாவை இலங்கை அரசு ரத்து செய்தது. பின்னர் விடுதலைபுலிகளுடனான போர் நிறுத்தம் 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போது மீண்டும் கச்சத்தீவு திருவிழா 3 ஆண்டுகள் நடந்தது. ஆனால், அப்போது கச்சத்தீவு செல்ல இந்திய பக்தர்களுக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் அரசுக்கு தெரியாமல் நூற்றுக்கும் குறைவான பக்தர்கள் அந்த விழாவில் பங்கேற்றனர். இதனை அரசு நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு இலங்கை அதிபராக பதவியேற்ற ராஜபக்சே, விடுதலைப்புலிகளுடன் கடுமையான போர் தொடுத்தார். போரில் புலிகள் வீழ்ந்த நிலையில், முழுக்க, முழுக்க இலங்கை தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா 2010ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்கு இடையே நடந்து வருகிறது. துவக்கத்தில் 10 நாட்கள் நடந்த இந்த விழா பின்னர் 3 நாட்களாக குறைக்கப்பட்டு, தற்போது ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படும் விழாவாக மாற்றியிருக்கின்றனர்.

இலங்கை கடற்படையினர். அது மட்டுமில்லாமல் இந்த விழாவில் யார், யார் பங்கேற்க வேண்டும். பங்கேற்பவர்கள் என்ன பேச வேண்டும் என்பதை கூட இலங்கை கடற்படையினரே தீர்மானிக்கின்றனர். இதனால் இலங்கையில் தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை தீர்க்க அந்தோணியாரிடம் வெளிப்படையாக வேண்டுதல் வைக்கக்கூட முடியாத நிலையே இன்றளவும் நீடிக்கிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள செல்லும் இந்திய பக்தர்களுக்கு இந்திய அரசும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் தேவையில்லை என்ற போதும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி சீட்டு பெற்றவர்களே திருவிழாவிற்கு செல்ல முடியும். அவ்வாறு அனுமதி பெற்று செல்பவர்கள் வியாபார நோக்கத்துடன் பொருட்களை எடுத்து செல்லவோ, தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லவோ அனுமதி கிடையாது. மேலும் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள், இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள், தமிழ் அமைப்புகளில் தொடர்புடையவர்கள் இந்த விழாவிற்கு செல்ல முடியாது.

இந்நிலையில்தான். இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 28ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கும் விழா மறுநாள் மார்ச் 1ஆம் தேதி பகல் வரை நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு கடித்தத்தை ராமேஸ்வரம் பங்கு தந்தை சகாயராஜுக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் ஆதரவுடன் அமைந்துள்ள புதிய அரசு கச்சத்தீவு திருவிழாவை முன்பு போல சுதந்திரமாக கொண்டாட அனுமதிக்க வேண்டும் என இலங்கை தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதேபோல் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க செல்லும் இந்திய பயணிகளுக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட கூடாது என எதிர்பார்க்கின்றனர்.

கச்சத்தீவு திருவிழா முன்பு போல பண்ட மாற்று திருவிழாவாக நடத்தப்பட வேண்டும் எனவும், திருவிழா நாட்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் தங்கியுள்ள தமிழ் அகதிகளோ தங்களையும் கச்சத்தீவுக்கு அனுமதிப்பதன் மூலம் பல ஆண்டுகாலமாக பிரிந்து இருக்கும் தங்கள் உறவுகளை சந்திக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்தியாவிலும், இலங்கையிலும் அமைந்துள்ள புதிய அரசுகள் இந்திய மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழ் அகதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுமா?

English summary
Kachchatheevu St.Antony fest will start on 28 of this month, Tamils expect festival should be held in free maner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X