For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேமுதிக, பாமக மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏக்கள் 10 பேர் ஜெ.வை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக, பாமக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக இருந்து சமீபத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த 10 பேரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அதிருப்தி எம்.எல்.ஏக்களாக இருந்த 10 பேரின் பிராண்ட் இன்று முதல் மாறியுள்ளது.

கடந்த 2011ம் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுடன், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் தேமுதிகவிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. கட்சி தொடங்கிய சில வருடங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சித்தலைவரானார். திமுகவிற்கு மிகப்பெரிய தோல்வியாக கடந்த சட்டசபை தேர்தல் அமைந்தது.

10 Rebel MLAs join ADMK

ஆனால் தேமுதிக - அதிமுக கூட்டணி ஒரு ஆண்டு கூட நீடிக்கவில்லை. பால், பஸ், மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழக சட்டசபை கூட்டத்தில் தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமார் பேசிய போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் வைத்தியலிங்கம் அதிமுக தயவால் தான் நீங்கள் எல்லாம் எம்எல்ஏவாக இருக்கிறீர்கள் என குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து அதிமுக, தேமுதிக எம்எல்ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை நோக்கி அதிமுகவினர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயகாந்த் நாக்கை சுழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். அப்போது அவையில் இருந்த ஜெயலலிதா, தேமுதிகவுடன் தேர்தல் கூட்டணி வைத்து கொண்டதற்கு வெட்கபடுகிறேன் என கூறினார். இதனை தொடர்ந்து இருகட்சிகளிடையே விரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் சிலரை இழுக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டது. தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜ் முதல்வர் ஜெயலலிதா சந்தித்து தனது தொகுதி கோரிக்கை அளித்தார். இதனை தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக தேமுதிக எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர். இதனை தொடர்ந்து இந்த தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சட்டசபையில் தனி இருக்கை ஓதுக்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆதரவு நிலைபாட்டிலேயே இவர்கள் 8 பேரும் செயல்பட்டு வந்தனர்.

இதே போன்று பாமகவைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ கலையரசு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்எல்ஏ ராமசாமி ஆகியோரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த இருவரையும் பாமக, புதிய தமிழகம் கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ், கிருஷ்ணசாமி ஆகியோர் அறிவித்தனர்.

ஆனால் தேமுதிக எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து நீக்கமால், தேமுதிக எம்எல்ஏக்களாகவே சட்டசபையில் நீடித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தின் போது எம்எல்ஏ அருண்பாண்டியன் எப்போது எங்களது பிராண்ட் மாறும் என முதல்வரிடம் கேட்டார்.

இதனை தொடர்ந்து தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்களை அவைக்கு வெளியே சந்தித்த முதல்வர் ஜெயலலிதா விரைவில் உங்களை அதிமுகவில் இணைத்து கொள்கிறேன் என கூறினார்.

இதனை தொடர்ந்து தேமுதிக அதிருப்தி 8 எம்எல்ஏக்கள், பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ ஒருவர் மற்றும் புதிய தமிழகம் எம்எல்ஏ ஒருவர் தமிழக

சட்டசபை உறுப்பினர்கள் பதவியை கடந்த சில தினங்களுக்கு ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் வழங்கினர். அதை அவர் ஏற்றார்.

தேமுதிக, கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். நிலக்கோட்டை புதிய தமிழகம் எம்எல்ஏ ராமசாமி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ கலையரசு ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். உடனடியாக இவர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் 8 பேரின் ராஜினாமாவை அடுத்து விஜயகாந்தின் எதிர்கட்சித்தலைவர் பதவி பறிபோனது.

இந்த நிலையில் அதிமுகவில் இணைவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பே மனு கொடுத்து காத்திருந்தனர். நல்ல நாள் பார்த்து அதிமுக தலைமையிடம் இருந்து அழைப்பு வரவே இன்று மாஜி எம்.எல்.ஏக்கள் பத்து பேரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனையடுத்து இவர்களின் பிராண்ட் இன்று முதல் மாறியுள்ளது.

மேல் நோக்கு நாளில் அதிமுகவில் இணைந்த பத்து பேருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? அல்லது ஆயிரத்தில் ஒருவராக அதிமுகவில் கரைந்து காணாமல் போவார்களா? பார்க்கலாம்.

English summary
10 reble MLAs from DMDK, PT and PMK joined ADMK today after meeting CM Jayalalitha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X