For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: பயணிகள் கூட்டத்தில் வேன் பாய்ந்து 3 பேர் பலி- 5 பேர் காயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மூலக்கடையில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்து 3 பேர் உயிரிழந்தனர் 5 பேர் படுகாயமடைந்தனர்.

வியாசர்பாடியில் இருந்து இன்று காலையில் மாதவரத்தை அடுத்த வடபெரும்பாக்கத்துக்கு மகேந்திரா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவர் ரகமத்துல்லா அதனை ஓட்டிச்சென்றார். காலை 6.45 மணியளவில் மூலக்கடை சந்திப்பில் வேன் சென்றபோது, திடீரென டிரைவர் ரகமத்துல்லாவுக்கு வலிப்பு வந்தது. இதனால் வேனை அவர் அவசரமாக நிறுத்த முயன்றார்.

ஆனால், வலிப்பு அதிகமானதால் வேனுக்குள்ளேயே ரகமத்துல்லாவின் கை, கால்கள் வெட்டி இழுக்கத் தொடங்கின. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறு மாறாக ஓடியது. சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை இடித்துத் தள்ளி விட்டு, பஸ்சுக்காக அங்கு காத்து நின்ற பயணிகள் கூட்டத்துக்குள் மின்னல் வேகத்தில் வேன் பாய்ந்தது.

இதனை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால், 5 பேர் மீது மோதிய வேன், அங்கு கட்டிடம் ஒன்றின் அருகில் பொறுத்தப்பட்டிருந்த பெரிய இரும்புத்தகடில் ‘டமார்' என்ற சத்தத்துடன் மோதி நின்றது. இதனால் மூலக்கடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

3 பேர் பலி

வேனைக்கண்டு சிதறி ஓடியவர்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். இந்த விபத்தில் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த முதியவர் ரங்க பாஷியம் (64) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். புழலில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவர், அங்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றபோதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

அயனாவரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வரும் ராஜேஸ் என்பவரும், காலையில் பணிக்கு செல்வதற்காக காத்திருந்தார். விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பலத்த காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி மாதவரத்தை சேர்ந்த அருண்குமாரும் (21), மேலும் ஒருவரும் உயிரிழந்தனர்.

5 பேர் படுகாயம்

வியாசர்பாடி பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கர்ணம்மாள் (48), கொடுங்கையூர் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த கந்தசாமி (65), கண்ணதாசன் நகர் விவேக், வியாசர்பாடியை சேர்ந்த மணி (50) ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்தும் வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனர் மகேஸ்குமார், உதவி கமிஷனர் அழகு, மாதவரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

டிரைவர் உயிர் தப்பினார்

பின்னர் விபத்தில் சிக்கிய வேனுக்குள் வலிப்புடன் துடித்துக்கொண்டிந்த டிரைவர் ரகமத்துல்லாவை பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். காயம் எதுவுமின்றி உயிர் தப்பிய அவரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

வடசென்னையின் நுழைவு வாயிலாக விளங்கும் மூலக்கடையில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

மூலக்கடை பகுதியில் இருந்து கோயம்பேடு, செங்குன்றம், புழல், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் பஸ்சுக்காக மூலக்கடை சந்திப்பில் காலையிலேயே காத்திருப்பார்கள். அதனால் அடிக்கடி விபத்தில் சிக்க நேரிடுகிறது.

English summary
Three people were killed and five others were injured when a van ran into a crowd waiting at a bus stand at Moolakadai in north Chennai on Wednesday . While C Rangabashyam , 41, a coolie, died on the spot ,MTC conductor A Rajesh and 17-year-old engineering student E Arun Kumar died at Stanley Medical College and Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X