For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜில்லென்று தொடங்கி ஆலங்கட்டி மழையோடு முடிந்த அக்னி நட்சத்திரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜில்லென்று மழையோடு தொடங்கிய கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆலங்கட்டி மழையோடு நேற்று முடிவுக்கு வந்தது.

தஞ்சாவூர், தேனி, பழனி உள்ளிட்ட பல ஊர்களில் ஆலங்கட்டி மழை பெய்து பூமியை குளிர்வித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை காற்றுடன் கூடிய மழை பெய்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடும் வெப்பம் நிலவியதால், மழை பெய்தும் பயனில்லாமல் இருந்தது.

அக்னிநட்சத்திரத்தின் நிறைவு தினமான புதன்கிழமையன்றும் காலை நேரத்தில் தஞ்சாவூரில் வெப்பம் கடுமையாக இருந்தது. இந்நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கி, சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது.

சூறாவளி காற்றுடன் மழை

சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை இருந்தது. காற்றுக்கு மின் கம்பமும் ஆடியதால் மின் கம்பிகள் உரசி பலத்த சப்தத்துடன் வெடித்தது. மேலும், தீப்பொறிகளும் தெறித்து விழுந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. பின்னர், சுமார் 2 மணிநேரத்துக்குப் பிறகு அப்பகுதியில் மின் வினியோகம் கிடைக்கத் தொடங்கியது.

குளுமை பரவியது

இந்த மழையால் மாநகரில் நிலவிய வெப்பம் தணிந்தது. மேலும், விவசாயத்துக்கும் இந்த மழை பயனுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் போட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்.

உளுந்து, எள் சாகுபடி

மேலும், கோடை உழவு செய்யப்பட்டுள்ள நிலங்களில் மழை நீர் மூலம் ஈரம் காக்கும் என்பதால் சாகுபடி செய்வதற்கு உதவும். கோடையில் பயிரிடப்பட்ட உளுந்து, எள் பயிர்களில் காய் பிடிக்கும் தருணம் இது. மழை சிறிது நேரம் மட்டுமே பெய்ததால் பயிர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

A cool end of Agni Natchatram

பழனியில் ஆலங்கட்டிமழை

பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமார் மூன்றரை மணி நேரம் மழை பெய்தது.பல பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்து பல பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டது.

தீப்பிடித்த மரம்

பழநியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகளில் உள்ள பிரிட்ஜ், டிவி, மிக்சி போன்ற மின்னனு சாதனங்கள் பழுதடைந்தன. வெயிலில் உலர்த்துவதற்காக உலர் களங்களில் வைக்கப்பட்டிருந்த பயிர்வகைகள் நனைந்து நாசமாயின.இடி விழுந்ததால் பழநி, தட்டான் குளத்தைச் சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது வீட்டின் முன்பிருந்த தென்னை மரம் தீப்பிடித்தது.

இடிவிழுந்து விபத்து

அதுபோல் இடி விழுந்ததில் பழநி அருகே நரிக்கல்பட்டியில் உள்ள பழனிச்சாமி என்பவரது டீக்கடையில் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புப்படையினர் நிலைய அலுவலர் மயில்ராஜு தலைமையில் சம்பவ இடங்களுக்கு விரைந்து தீயை அணைத்தனர்

ரோப்கார் இயக்கம் நிறுத்தம்

இந்த மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டத்துக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் பூமி குளிர்ந்து குளுமையான சூழல் நிலவியது. கனமழையின் காரணமாக சுமார் 1.30 மணி நேரம் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது.

பக்தர்கள் அவதி

மழையால் பழனியில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஒடியது. பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்களும் திடீர் மழையில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகினர்.

மழையோடு முடிந்த அக்னி

அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது தொடர்ந்து 4 நாள்களுக்கு மழை பெய்தது. இதேபோல, அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான புதன்கிழமையும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Agni Natchatram end yesterday. Summer rain, though unseasonable, has helped farmers of Thanjavur district, take up some agriculture activities. Summer ploughing has been taken up by farmers at various places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X