For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பெரிய அய்யா'!

By Shankar
Google Oneindia Tamil News

A tribute to Periya Ayya Ramachandra Adithyan
குடும்பத்தில் பெரியவராகப் பிறந்துவிட்டதால் பா ராமச்சந்திர ஆதித்தனை உறவினர்களும் ஊழியர்களும் பெரிய அய்யா என்று அழைத்தனர். ஆனால் தன் குணத்தாலும் பண்பாலும் கூட அவர் பெரிய அய்யாவாகவே திகழ்ந்தவர் என்றால் மிகையல்ல.

தன் ஊழியர்களைப் பார்த்துக் கொள்வதில் அவருக்கு நிகரானவர் இல்லை.

அவரது மாலை முரசு, கதிரவன், தேவி, கண்மணி, பெண்மணி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருமே நினைவு கூரும் விஷயம், ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் பெரியவர் காட்டிய நேரம் தவறாமை.

எத்தனை பெரிய நெருக்கடியிலும் சம்பளத்தை மட்டும் 7-ம் தேதியோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னதாகவோ தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினம் என்றால் ஒரு நாள் முன்பாகவே சம்பளம் வாங்க வருமாறு கண்டிப்புடன் கூடிய ஒரு அழைப்பு வரும், மேலாளரிடமிருந்து!

ஒரு முறை, நிதிப் பற்றாக்குறை காரணமாக 7-ம் தேதி சம்பளம் தருவது தாமதமாகும் எனத் தெரிந்து, அலுவலகத்தின் பத்திரங்களை பிணையமாக வைத்து கடன் வாங்கி சம்பளம் தந்தததை மூத்த ஊழியர்கள் - நிருபர்கள் அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. சம்பளம் குறைவோ அதிகமோ.. அதைச் சொன்ன தேதியில் கொடுத்துவிட வேண்டும் என்ற அவரது கொள்கை போற்றத்தக்கது.

ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களுக்கு அவர் அதிக மதிப்பு தருவார். திருமண நாள், பிறந்த நாள் என அவரிடம் செல்லும் அனைவருக்கும் பரிசும் விருந்தும் உண்டு.

அதேபோல ஊழியர்களின் குடும்பத்தில் ஏதாவது சோகமோ அல்லது எதிர்பாராத மருத்துவச் செலவோ ஏற்பட்டால் விஷயத்தைக் கேட்டுக் கொண்டு அதற்கு முழுவதுமான உதவிகளைச் செய்வார்.

ஊழியர்களின் திருமணத்துக்கு தவறாமல் நேரில் போய், பெரும் தொகையை அன்பளிப்பாகத் தருவது அவர் வழக்கம். அவருடன் அவரது துணைவியார் செல்ல நேர்ந்தால், தன் பங்குக்கு அவரும் பெரும் தொகையைத் தந்துவிடுவார்.

தன்னிடமிருந்து விலகிய பணியாளர், மீண்டும் ஏதாவது ஒரு தருணத்தில் தன்னைச் சந்திக்க நேர்ந்தால், அவரிடம் முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல், ஏதும் நடக்காதது போல இயல்பாகப் பேசி, நலம் விசாரித்து, கையில் பணமும் தருவது அவர் இயல்பு. ஆயுத பூஜை என்றால் போதும், அத்தனை பேரும் கொண்டாட்ட மூடில் இருப்பார்கள்.. அன்று கட்டாயம் அய்யாவைப் பார்க்க வேண்டும்!

வீடு மாற்ற வேண்டும், அட்வான்ஸ் தரவேண்டும் என அவரிடம் போய் நின்ற பலருக்கு முழு அட்வான்ஸ் பணத்தையும் அலுவலகமே செலுத்த ஏற்பாடு செய்தவர் பெரியவர். இதைல்லாம் தனிப்பட்ட உதவிகள் என்றால், தமிழர் நலனுக்காக அவர் செய்த உதவிகள் மகத்தானவை.

தேர்ந்த எடிட்டர்

அதேபோல செய்திக்கு அவர் தலைப்பு வைக்கும் விதம் அத்தனை கச்சிதமாக இருக்கும். இரவு ஷிப்ட்களின் போது, போனில் செய்திகளைக் கேட்டுக் கொண்டு அவர் தலைப்பை டிக்டேட் செய்யும் விதம் ஆச்சர்யப்படுத்தும். அந்தத் தலைப்பிலேயே செய்தியின் தன்மை, படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அத்தனையும் இருக்கும்.

பொதுவாக மாலை முரசில் தலையங்கப் பக்கம் இருக்காது. ஆனால் முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் அவரே தலையங்கம் எழுதுவார். ஈழப் போர், யாழ்ப்பாண வீழ்ச்சி, கருணாநிதி கைது போன்ற நிகழ்வுகளின் போது அவர் எழுதிய தலையங்கங்கள் உணர்ச்சிப்பூர்வமானவை.

ஈழத் தமிழருக்கு...

ஈழத் தமிழர்களின்பால் அவர் கொண்ட அக்கறை அளப்பரியது.. யாரோடும் ஒப்பிட முடியாதது. மாலை முரசு - கதிரவனில் ஈழத்துச் செய்திகளுக்குத்தான் முதலிடம். மற்றவை அப்புறம்தான். அதுவும் போர்க்காலங்களில் மாலை முரசு படிப்பவர்களின் உணர்ச்சி நரம்புகள் தெறிக்கும் அளவுக்கு செய்திகளும் படங்களும் அமையும்.

முல்லைத்தீவு தாக்குதலை தலைவர் பிரபாகரன் முன்னின்று நடத்து சிங்கள ராணுவத்தை தலைதெறிக்க ஓட விட்டதை மாலை முரசு செய்தியாக்கியிருந்த விதம் அத்தனை அருமையாக இருந்தது. தமிழகத்தில் வேறு எந்தப் பத்திரிகையும் அந்த அளவுக்கு உணர்வோடு அந்த செய்திகளை வெளியிட்டதில்லை எனும் அளவுக்கு அவர் உண்மையாக இருந்தார்.

யாழ்ப்பாண நகரம் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் வந்தபோது, வேதனை தாங்காமல் அழுதே விட்டார் ராமச்சந்திர ஆதித்தன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது அபார நம்பிக்கையும் ஆழ்ந்த பற்றும் கொண்ட பெரியவர், தமிழினத்துக்கே விடியல் தரப் போகும் தலைவர் அவர் என்று செல்லுமிடமெல்லாம் சொன்னார், தன் பத்திரிகையிலும் அதை எழுதி வந்தார்.

நிதி உதவி..

தமிழகத்தில் எந்த பத்திரிகை அதிபரும் செய்யாத ஒரு விஷயத்தை ஈழத் தமிழருக்காக ராமச்சந்திரன் செய்தார். போரில் துயரங்களை அனுபவித்த ஈழ மக்களுக்காக தானே களமிறங்கி நிதி திரட்டி அனுப்பி வைத்தார்.

அரசியல், கட்சி சார்புகளைத் தாண்டி, தமிழருக்கான பத்திரிகையாகத்தான் நடத்த வேண்டும் என்பது அவர் நோக்கமாக இருந்தது.

மெர்க்கண்டைல் வங்கி மீட்பு

எஸ்ஸார் குழுமத்தின் சிவசங்கரனிடம் இருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை மீட்கும் குழுவுக்குத் தலைவராக இருந்த, ராமச்சந்திர ஆதித்தன், வைகோ துணையுடன் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து வங்கியை மீட்டுத் தரக் கோரினார். வங்கியும் மீட்கப்பட்டது. அதன் இயக்குநராகவும் இருந்து வழிநடத்தி, அதே வங்கியில் தனக்கு எதிர்ப்பு கிளம்பியதும் விலகிக் கொண்டார்.

நாடார் இன மக்களுக்காக...

தான் சார்ந்த நாடார் இன மக்களுக்காக முதல் முறையாக சென்னையில் பிரமாண்டமாக ஒரு மாநாடு நடத்தினார் ராமச்சந்திர ஆதித்தன். அதன் விளைவு நாடார் இன மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

தமிழர் பத்திரிகை

ஆதித்தனார் குடும்ப வாரிசுகளிடையே உறவு ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் தங்களின் மாலை முரசு, தினத்தந்தி, தினகரன் (அன்றைய), மாலை மலர் போன்றவற்றை தமிழருக்கான பத்திரிகைகளாக நிலை நிறுத்தினர். தமிழருக்கு எதிரான நிலை எங்கு தோன்றினாலும் கிளம்பிய முதல் குரல் இந்த பத்திரிகைகளிடமிருந்துதான் என்பதை தமிழ்ச் சமூகம் மறுக்க முடியாது.

English summary
This is the tribute to Periya Ayya Ramachandra Adithyan, one of the stalwarts in Tamil print media world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X