For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு செய்தால் அதிகார மையங்கள் உருவாகும்: ராமதாஸ் எச்சரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஆலோசகர் பதவியை அகற்றுவதுடன், பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள அதிகாரிகளையும் உடனடியாக நீக்கிவிட்டு தகுதியும், திறமையும் உள்ள அதிகாரிகளை அந்தப் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனராக அசோக் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரை காவல்துறை தலைமை இயக்குனராக பணியாற்றி இன்றுடன் ஓய்வு பெறும் கே.இராமானுஜம் தமிழக அரசின் ஆலோசகராக அமர்த்தப்பட்டிருக்கிறார். பதவியில் இருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளை ஆலோசகர்களாக நியமிப்பதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.

Advisor posts should be vanished from Tamilnadu government: Ramadoss

ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு அளிப்பதை வழக்கமான நடைமுறையாக கடைபிடிக்க கூடாது; தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் தான் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அ.தி.மு.க. அரசோ தங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஏதோ ஒரு பதவியைக் கொடுத்து அனைத்து அரசு சலுகைகளையும், அதிகாரத்தையும் தொடர்ந்து அனுபவிக்க வகை செய்து தருவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட தேவேந்திரநாத் சாரங்கி ஓய்வுப்பெற்ற பின்னர் அவருக்கு ஏதேனும் ஒரு பதவி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவி ஓராண்டிற்கும் மேலாக நிரப்பப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தலைமைச்செயலர் சாரங்கி ஓய்வு பெற்றதற்கு அடுத்த நாளே ஆலோசகர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அப்பதவியில் அவர் அமர்த்தப்பட்டார்.

அவருக்குப் பிறகு தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றவுடன் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தமிழக காவல்துறைத் தலைமை இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற கே.இராமானுஜம் தமிழ்நாடு அரசின் இன்னொரு ஆலோசகராக அமர்த்தப்பட்டிருக்கிறார். இவர்கள் தவிர அரசுத்துறை செயலராக இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற கே.என்.வெங்கட் ரமணனுக்கு ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு, முதலமைச்சரின் செயலாளர் பதவியில் நீடிக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த ஏ.எம்.பி.ஜமாலுதீன் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதமே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு அதே பதவியில் தொடருகிறார். தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவில் காவல்துறை தலைவராக (ஐ.ஜி.) பணியாற்றி கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்ற குணசீலன் அதே துறையில் அதே நிலையில் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதேபோல் மேலும் பல அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஓர் அதிகாரியின் சேவை கண்டிப்பாக தேவை என்ற பட்சத்தில், அவரது இடத்திற்கு இன்னொரு அதிகாரியைத் தயார் படுத்தும் வரை, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதில் தவறு இல்லை. அதேபோல் ஆலோசகர் பதவி அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஆலோசகர் பதவியாக இருந்தாலும், பணி நீட்டிப்பாக இருந்தாலும் அது அவர்கள் பதவியில் இருந்தபோது ஆட்சியாளர்களின் தவறுகளுக்கும், முறைகேடுகளுக்கும் துணை போனதற்கு வழங்கப்படும் பரிசாகவே உள்ளது என்பது தான் வேதனை அளிக்கும் உண்மை ஆகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியில் இருக்கும்போது, முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும், பணிகளை பகிர்ந்து கொள்ளவும் அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்க துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளனர். எனவே, முதலமைச்சருக்கு ஆலோசகர்களை நியமிப்பது தேவையற்றது. குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் போதுதான், அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்காக ஆளுநருக்கு ஆலோசகர்கள் அமர்த்தப்படுவது வழக்கமாகும்.

கடந்த காலங்களில் 1989-91 ஆட்சிக்காலத்தில் கருணாநிதியின் ஆலோசகராக எஸ்.குகன் நியமிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த முதல்வருக்கும் ஆலோசகர் நியமிக்கப்பட்ட வரலாறு இல்லை. தமிழக அரசில் நேர்மையும், திறமையும் உள்ள அதிகாரிகள் ஏராளமாக உள்ளனர். ஓர் அதிகாரி ஓய்வு பெற்றால் அவரது இடத்தை நிரப்ப 10 திறமையான அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது ஓய்வு பெற்றவர்களை ஆலோசகர்களாக நியமிப்பதும், பணி நீட்டிப்பு வழங்குவதும் தேவையற்ற அதிகார மையங்களை உருவாக்கும்.

இதனால் ஊழலும், முறைகேடுகளும் தான் அதிகரிக்குமே தவிர, நிர்வாகத் திறன் அதிகரிக்காது. அதுமட்டுமின்றி, ஓய்வுபெற்றோருக்கு பணி நீட்டிப்பு வழங்கினால், திறமையானவர்களுக்கு தகுதியான பதவி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆலோசகர் பதவியை ஒழிப்பதுடன், அப்பதவியில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல், பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள அதிகாரிகளையும் உடனடியாக நீக்கிவிட்டு தகுதியும், திறமையும் உள்ள அதிகாரிகளை அந்தப் பதவிகளில் தமிழக அரசு அமர்த்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
PMK founder ramadoss insist advisor posts shouldbe vanished from Tamilnadu government as it will lead to crate power centers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X