For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஐடி, என்ஐடி கல்வி கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தும் பரிந்துரைக்கு அன்புமணி, வேல்முருகன் கடும் எதிர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களிலும், தேசிய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களிலும் கல்விக்கட்டணத்தை 200 மடங்கு உயர்த்தினால் ஏழைகளுக்கு இந்த கல்வி எட்டாக்கனியாகும் என்று பாமக இளைஞரணி தலைவரும், எம்.பியுமான டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். இந்த கல்வி நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களாகக் கருதப்படும் ஐஐடி கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐஐடி கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்குக் கட்டணம் தற்போது ரூ. 90,000 ஆகும். இக்கட்டணத்தை ரூ. 2.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

Anbumani condemns IIT and NIT to increase its course fee by 300 per cent

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை:

சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) ஆண்டு கல்வி கட்டணத்தை 90,000 ரூபாயிலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐ.ஐ.டி துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அதேபோல், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (என்.ஐ.டி) கட்டணத்தை 70,000 ரூபாயிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என போற்றப்படுபவை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் தான். தொழில்நுட்பக் கல்வி பயிலத் துடிக்கும் மாணவ, மாணவியரின் கனவு இந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விட வேண்டும் என்பது தான். இதற்காக 2 கட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதித் தான் ஐ.ஐ.டி.க்களில் சேர முடிகிறது.

நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றாலும், பத்தாயிரத்துக்கும் குறைவான மாணவர்களால் மட்டுமே ஐ.ஐ.டிக்களில் நுழைய முடிகிறது.

உதாரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சுமார் 11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால், அவர்களில் ஐ.ஐ.டி.க்களில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 150 மட்டுமே. இவ்வளவு கடுமையான போட்டிகளுக்கு நடுவே ஐ.ஐ.டிக்களில் சேர மாணவர்கள் துடிப்பதற்கு காரணம் அங்கு குறைந்த கட்டணத்தில் அதிக தரமான தொழில்நுட்பக் கல்வியை பெற முடியும் என்பது தான். ஆனால், இந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில் ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்களின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஐ.ஐ.டிக்களில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வரை செலவிடப் படுவதாகவும், ஐ.ஐ.டி.க்களுக்கு நிதி சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்காக மாணவர் களுக்கு செலவிடப் படும் தொகையில் பெரும்பகுதியை அவர்களிடமிருந்தே வசூலிக்கும் நோக்குடன் கட்டண உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.ஐ.டி. துணைக்குழு தெரிவித்திருக்கிறது. இந்த வாதம் கல்வியாளர்கள் முன்வைக்கும் வாதமாக தெரியவில்லை; கல்வி வணிகர்கள் முன்வைக்கும் வாதமாகவே தோன்றுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஐ.ஐ.டிக்கு இணையான தனியார் கல்வி நிறுவனம் ஆகும். இங்கு ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக ரூ.3.10 லட்சம் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் உள்ள வீர்மாதா ஜீஜாபாய் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சர்தார் வல்லபாய் படேல் பொறியியல் கல்லூரி ஆகியவை ஐ.ஐ.டிக்கு இணையான அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகும்.

இந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ஆண்டு கட்டணமாக முறையே ரூ.2.26 லட்சம், ரூ.2.27 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பல தனியார் கல்லூரிகளில் சுமார் 4 லட்சத்தில் ஐ.ஐ.டிக்கு இணையான தொழில்நுட்பக் கல்வி கிடைக்கிறது. அவ்வாறு இருக்கும் போது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாகவும், அதைவிட அதிகமாகவும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாததாகும். இது உயர் தொழில்நுட்பக் கல்வியை அரசாங்கமே கடைச் சரக்காக்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்கு சமமானதாகும்.

ஐ.ஐ.டி.க்களின் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.3 லட்சமாகவும், என்.ஐ.டி.க்களின் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.2 லட்சமாகவும் உயர்த்துவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர் தொழில்நுட்பக் கல்வி வாய்ப்புகளையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, பல மாதங்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு அடுக்கடுக்காக பல்வேறு கட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதி ஐ.ஐ.டிக்களிலும், என்.ஐ.டி.க்களிலும் சேருவதற்கு பதிலாக, எந்த நுழைவுத் தேர்வும் எழுதாமல் சற்று அதிக கட்டணம் செலுத்தி தனியார் உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விடலாம் என்ற சிந்தனையை மாணவர்களிடம் விதைத்து விடும். இது கல்வி தனியார்மயமாகவே வழிவகுக்கும்.

உயர்தொழில்நுட்பக் கல்வியின் சீரழிவுக்கும், தனியார் மயமாக்கலுக்கும் வழிவகுக்கும் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. கல்விக்கட்டண உயர்வை மத்திய அரசு ஒரு போதும் ஏற்கக்கூடாது. எனவே, ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.க்களின் கட்டண உயர்வு குறித்த பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கக்கூடாது. அத்துடன் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான வினாத் தாள்களை தமிழிலும் வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை யையும் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

வேல்முருகன்

இதே போல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு ஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவது என்பது எட்டாக் கனியாகவே இன்னமும் நீடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதையே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கிடுகிடுவென கல்வி கட்டணங்களும் உயர்த்தப்பட்டு வருகின்றன.

2008-09ல் ஐ.ஐ.டி. கல்விக் கட்டணம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு 80% அளவுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ90,000 என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ரூ90,000 என்பதை 200% அளவுக்கு அதாவது ரூ3 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது இந்த நாட்டின் ஏழை எளிய மக்களின் பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்கும் கொடுஞ்செயலாகும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில் சிபல் இருந்த காலத்தில் ககோட்கர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியானது 2012-13ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு ஐஐடி கல்வி கட்டணத்தை ரூ2 லட்சத்துக்கு அதிகமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான பரிந்துரைகளை அளித்திருந்தது.

அந்த பரிந்துரைகள் அனைத்துமே இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் ஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வியை சிந்தித்துகூட பார்த்துவிடக் கூடாது என்கிற வகையில் இருந்தன. இப்படி கட்டணங்களை நிர்ணயிப்பதே மத்திய அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல் ஐஐடிக்கள் நிதி விவகாரத்தில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற ஒரு காரணமும் சொல்லப்பட்டது.

ஆனால் நிச்சயம் கடுமையான எதிர்ப்பு எழும் என்பதால் முந்தைய காங்கிரஸ் அரசு ககோட்கர் கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை. இந்த நிலையில் 2015-ம் ஆண்டு பாஜக ஆட்சிக் காலத்தில் ஐஐடி இயக்குநர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுதான் ககோட்கர் கமிட்டியின் பரிந்துரைகளை விஞ்சும் வகையில் 200% அளவுக்கு கல்விக் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது.

அத்துடன் புதியதாக நுழைவுத்தேர்வு முறையையும் அறிமுகப்படுத்தவும் இந்த குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது. நாட்டின் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் இத்தகைய உயர் தொழில்நுட்ப கல்வி கிடைக்க செய்ய வேண்டியது ஒரு அரசின் அடிப்படை கடமை. இதைச் செய்யாமல் கல்வி கொள்ளையர்களைப் போல மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது.

இத்தகைய ஏழை எளிய மக்களின் உயர் தொழில்நுட்பக் கல்வியைப் பாழாக்குகிற வகையிலான கட்டண உயர்வு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்; புதிய நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இதுபோன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை நாடு முழுவதும் பரவலாக பல்வேறு நகரங்களிலும் ஏற்படுத்துவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனைடவர்; அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் கல்வி உரிமையை காவு வாங்கும் இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMK M.P Anbumani and TVK leader Velmurugan have urged central government, Tuition fees at the National Institutes of Technology are set to jump threefold, bringing them on a par with those at the best private engineering colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X