• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிப்பையே மூச்சாகக் கொண்ட நண்பர் கமலுக்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும்... அன்புமணி வாழ்த்து

|

சென்னை: நடிப்பையே மூச்சாகக் கொண்ட நண்பர் கமல், ஆஸ்கர் முதல் பாரதரத்னா வரை மீதமுள்ள அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைக்க வாழ்த்துவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கமலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Anbumani congratulates Kamal Haasan

அந்தவகையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் பிரான்ஸ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது நடிகர் நண்பர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன். நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.

பிரான்ஸ் நாட்டின் சார்பில், கலை மற்றும் இலக்கியத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மூன்றாம் நிலையில் உள்ளது செவாலியே விருதாகும். 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விருதை பெறும் இரண்டாவது தமிழ் கலைஞர் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசாக கருதப்படும் கமலஹாசன், சிவாஜிக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெற்றிருப்பது சிறப்பாகும். பிரான்ஸ் நாட்டில் செவாலியே விருது தோற்றுவிக்கப்பட்டதன் அறுபதாவது ஆண்டில், அந்த விருது நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்படுவது கூடுதல் பெருமையாகும்.

உலகப்புகழ் பெற்ற விருதுகளில் ஒன்றான செவாலியே விருதை எந்த கலைஞர் வென்றாலும் அது வியப்புக்குரிய செய்தி தான். ஆனால், கமலஹாசன் இந்த விருதை வென்றதில் வியப்புக்கு இடமில்லை. நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, அந்த படத்திற்காக ஆறு வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தை வென்றவர் கமலஹாசன். 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம்ஃபேர் விருதை 19 முறை வென்றதுடன், இனி தமக்கு அவ்விருது வழங்க வேண்டாம் என கூறிய பெருமை, ஆசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி விருது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் என எண்ணற்ற பெருமைக்கு சொந்தக்காரரான கமலஹாசனுக்கு இது இன்னொரு விருது அவ்வளவு தான். இன்னும் கேட்டால் இந்த விருது இன்னும் ஒரு தசாப்தத்திற்கு முன்பே கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

நடிப்பை பிழைப்பாக கருதாமல் மூச்சாக கருதும் நண்பர் கமல்ஹாசனுக்கு இன்னும் பல பெருமைகள் காத்திருக்கின்றன. சிறந்த மனித நேயரும், சமூக அக்கறையாளருமான கமலஹாசன் ஆஸ்கர் முதல் பாரதரத்னா வரை மீதமுள்ள அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்' என அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஜி.ரா. வாழ்த்து...

இதேபோல், செவாலியே விருதுபெறும் கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'கலைத்துறையில் தொடர்ந்து சிறப்பாக பங்களிப்பு செலுத்தியவர்களுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த முறையில் இந்த ஆண்டு இந்த விருது பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. செவாலியே விருது பெறும் கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெற்றார். அதன் பிறகு அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோர் பெற்றனர். தற்போது இந்த விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவாஜிகணேசனுக்குப்பிறகு இந்த விருதைப்பெறுபவர் கமல்ஹாசன் ஆவார். கடந்த 57 ஆண்டுகளாக தன்னுடைய கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் திரை உலகில் ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். செவாலியே விருதுபெறும் கமல்ஹாசனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுகிறது; வாழ்த்துகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
The PMK leader Anbumani Ramadoss greeted actor Kamal Hassan as he gets Chevalier award from the France.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more