For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு தெருப் பாடகன், ஒரு தேசத் துரோக வழக்கு, ஓராயிரங்கோடி ரூபாய் திரையரங்கங்கள்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

மதுவிலக்குக் கோரியும், தமிழகத்தில் சாராயத்தை ஆறாய் பெருக்கெடுத்து ஓட விட்டதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஏகடியம் செய்தும், கண்டித்தும் பாடிய கோவன் எனப்படும் சிவதாஸ் (54) கைது செய்யப் பட்டிருக்கிறார்.

சாதாரண கைது இல்லை இது... தேசத் துரோக வழக்கிலும், இரண்டு சமூகங்கள் இடையே மோதலை உண்டாக்க பிரயத்தனப்பட்டதாகவும் கூறி கைது செய்யப்பட்டிருக்கிறார். அக்டோபர் 31 ம் தேதி அதிகாலையில் திருச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து சென்னைப் போலீசாரால் கைது செய்யப்பட்ட கோவன் அடுத்த நாள் சென்னை கொண்டு வரப்பட்டு மாஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். கோவனை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டதையடுத்து அவர் சிறைச் சாலைக்கு அனுப்பபட்டார். நவம்பர் 2ம் தேதி கோவனின் மகன் தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவனின் கைதில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதாக கூறி, அம் மனுவை முறைப்படி முடித்து வைத்து விட்டது.

இதனிடையே கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் கைது செய்ய தமிழக காவல் துறை துடித்துக் கொண்டிருப்பதை அறிந்து கொண்ட அவர் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரும், அவரது மகனும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். நவம்பர் 3ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் கோவனை தேசீய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துவிட்டது.

Arrest of Singer Kovan and Luxe Mall deal!

கிராமப்புறங்கில் ஒரு பழமொழி உண்டு. ‘கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை' என்பதுதான் அது. தமிழ்நாட்டில் எத்தனையோ ஜீவாதாரப் பிரச்சனைகள் இருக்கையில் திடீரென்று ஒரு தெருப் பாடகனை கைது செய்து இந்த அரசு சாதிக்கப் போவது என்னவென்பதுதான் கேள்வி. இந்த கைது நடந்த நேரம்தான் ஆத்திரத்தில் அள்ளித் தெளித்த இந் நடவடிக்கைக்கு வேறோர் பரிமாணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் 31ம் தேதி காலையில் வந்த ‘தி ஹிந்து' ஆங்கில நாளேட்டில் முதல் பக்கச் செய்தி, சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள சத்தியம் சினிமாஸூக்குச் சொந்தமான 11 திரையரங்கங்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கி விட்டது என்பதுதான் அது.

இந்த ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் முந்தைய பெயர் ஹாட்வீல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்பதாகும். இதன் பெயர் ஜாஸ் சினிமாஸ் என்று மாற்றம் செய்யப்பட்டது 2014ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி நடைபெற்ற நிறுவனத்தின் ஓர் அவசர பொதுக்குழு கூட்டத்தில். இந்தக் கூட்டத்தில் வி.கே சசிகலா மற்றும் அவரது உறவினர் ஜே இளவரசி ஆகியோர் கலந்து கொண்டனர். 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு 76 நாட்களுக்கு முன்பு இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

ஜாஸ் சினிமாஸ் வாங்கிய 11 திரையரங்கங்களின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்கிறது அந்த ரிப்போர்ட்.

இந்தச் செய்தி அக்டோபர் 31ம் தேதி காலையில் ‘தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் வெளி வருகிறது. அந்த நாளிதழ் கடைகளுக்கு வருவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு கோவன் கைது செய்யப் படுகிறார். எந்த பாடலுக்காக கோவன் கைது செய்யப்பட்டாரோ அந்த பாடல் இந்தாண்டு ஜூலை மாதம் முதலே ‘வினவு' இணைய தளத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது. கோவன் கைதால் விளைந்த ஒரே நன்மை அவரது கைதுக்கு முன்பு சில ஆயிரம் பேர் மட்டுமே பார்த்த அந்த வீடியோ பாடலை தற்போது பல லட்சம் பேர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.

ஜாஸ் சினிமாஸ் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பதினோரு திரையரங்கங்களை வாங்குகிறது என்பது 2011ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, முதன் முறையாக, அஇதிமுக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் மீது வைக்கப்படும் ஆதாரபூர்வமான, ஆணித்தரமான, மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டாகும்.

1991 - 1996 மற்றும் 2001 - 2006 ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அவருக்கு எதிரான எல்லா பெரிய ஊழல் குற்றச் சாட்டுகளும் முதல் இரண்டரை ஆண்டுகளிலேயே வந்து விட்டன. ஆனால் இந்த ஆட்சிக் காலத்தில் நான்கரை ஆண்டுகளில் ஆதாரத்துடன் வரும் முதல் பெரும் ஊழல் குற்றச்சாட்டு இதுதான். கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆதாரத்துடன் சொல்லக் கூடிய விதத்தில் பெரியதோர் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் ஜெ அரசு மீதில்லை.

அக்டோபர் 31ம் தேதி காலையில் வரக்கூடிய ஒரு செய்தி எவ்வாறு அன்று அதிகாலையிலேயே போலீசுக்குத் தெரிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்கலாம். தற்போது இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளும், அதிலும் குறிப்பாக தமிழக அரசும், காவல் துறையும் எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படை புரிதல் சிறிதளவு இருந்தால் கூட இந்தக் கேள்வி எழ வாய்ப்பில்லை. ஒட்டுக் கேட்பை, ஆட்சியாளர்கள் கிஞ்சித்தும் மெனக் கெடாமல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அற்புதக் கலையாய் மாற்றியிருப்பதை இங்கு நினைவு கூர்வது சாலச் சிறந்தது

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை ஆட்சியாளர்கள் அடித்திருக்கிறார்கள். ஒன்று ஜெயலலிதா ஆட்சியில், மறுக்க முடியாத ஆதாரங்களுடன், வெடித்துச் சிதறியிருக்கும் மிகப் பெரியதோர் ஊழல் குற்றச் சாட்டிலிருந்து, ஊடகங்கள் மற்றும் எதிர்கட்சியினரின் கவனத்தை சில நாட்களுக்காவது திசை திருப்புவது, மற்றொன்று மது விலக்குக் கோரி யாராவது போராடினால் அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பாய்வதும் நிரம்ப சாத்தியமானதுதான் என்ற அச்சத்தை ஏற்படுத்துவது.

இதை மெய்ப்பிக்கும் விதத்திலேயே அக்டோபர் 31 ம் தேதி தேசிய ஊடகங்களின் நடத்தை இருந்தது. சலசலப்பை ஏற்படுத்தும் செய்திகளுக்காக வேட்டை நாய்களாய் அலைந்து கொண்டிருக்கும் தேசிய ஊடகங்கள், குறிப்பாக தேசிய தொலைக் காட்சிகள் அனைத்தின் கவனமும் அன்றைய தினம் முழுவதும் கோவன் கைது விவகாரத்திலேயே இருந்தது.

மாநில ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கிக் குவித்திருக்கும் சொத்துப் பற்றி எந்தவோர் தேசிய தொலைக்காட்சியும் கண்டு கொள்ள வில்லை. இதிலிருந்தே கோவன் கைதில் ஆட்சியாளர்களின் முக்கியமான, உயரிய நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

அடுத்தடுத்த நாட்களில் எதிர்கட்சிகள் ஆயிரம் கோடி ரூபாய்க்கான திரையரங்கங்களை சசிகலா வாங்கியதை பேசினாலும், முதல் 24 மணி நேரத்தில் இந்தச் செய்தி தேசிய ஊடகங்களில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கத்திலிருந்து ஆட்சியாளர்கள் வெற்றிகரமாகத் தப்பி விட்டார்கள் என்பது மறுக்க முடியாத கள யதார்த்தம்.

இப்போது இந்த தேசத் துராக வழக்கைப் பார்ப்போம். இந்திய தண்டனைச் சட்டம் 124 (ஏ) தேச துரோகக் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக ஏற்படுத்தப் பட்ட சட்டம் என்று கூறப்பட்டாலும், ஆங்கிலேயர் ஆட்சியில் அதனைக் கொணர்ந்தது நாட்டின் விடுதலைக்காக போராடுபவர்களை ஒடுக்குவதுதான். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின், விட்டொழிக்க வேண்டிய எச்ச சொச்சங்களில் ஒன்று தான் இந்தச் சட்டப் பிரிவு. வெள்ளையர் ஆட்சியில் இந்தச் சட்டத்தின் கீழ்தான் தேசப் பிதா மஹாத்மா காந்தியும், பகத்சிங்கும், பாலகங்காதர திலகரும், அரவிந்த கோஷூம், வ.உ.சி யும் இன்ன பிற ஆயிரக்கணக்கான தியாகிகளும் கூட கைது செய்யப்பட்டனர். நாடு விடுதலையடைந்து 67 ஆண்டுகளாகியும், 150 ஆண்டுகளுக்கு முந்தய இந்த, ஆண்டைகளின் அடிமைச் சாசனத்தை இந்தியா பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள், குறிப்பாக முதலமைச்சர்கள் தங்களை விமர்சிப்பவர்களை பழி வாங்குவதற்காத்தான் இதனை கடந்த பல ஆண்டுளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது பல பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்குப் போடப்பட்டது. ஆனால் ஒரு வழக்கில் கூட மோடி அரசால் வெல்ல முடியவில்லை. குஜராத் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அனைத்து தேசத் துரோக வழக்குகளையும் ரத்து செய்து விட்டன. சமீபத்தில் மஹாராஷ்டிராவில் பாஜகவின் ஃபட்னாவிஸ் அரசாங்கம் அரசு அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தால் அவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய அரசாணை பிறப்பித்தது. பின்னர் மூண்ட கடும் கண்டனங்களால் ஃபட்னாவிஸ் அரசு இதனைத் திரும்ப பெற்றுக் கொண்டது.

ஆனால் இந்தியாவிலேயே தேசத் துரோக வழக்குகளை அதிகம் பதிவு செய்யும் மாநிலம் தமிழகம்தான். கூடங்குளத்தில் அணு மின்நிலையத்துக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கானோர் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கூடங்குளம் காவல் நிலையம் தான் இந்தியாவிலேயே தேசத் துராக வழக்குகளை அதிகம் பதிவு செய்திருக்கும் காவல் நிலையம் என்பது தமிழர்கள் நினைத்து, நினைத்து 'பெருமைப்பட' வேண்டியதுதான்! கூடங்குளம் காவல் நிலையத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 200 ஆண்டுகால ஆங்கிலேயர் சாதிக்க முடியாத சாதனையை இன்றைய தமிழக அரசு கடந்த நான்காண்டுகளில் சாதித்திருப்பதை எண்ணி தமிழர்கள் புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியுமா?!

கோவன் கைது ஒரு விதத்தில் நல்லதுதான். இந்த கொடூரமான சட்டத்தைப் பற்றிய நாடு தழுவிய விவாதத்தை இந்தக் கைது நடவடிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வ தேச சமூகத்தின் பார்வையையும் இந்த தேச துரோக சட்டத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இந்தியாவின் அனைத்து கட்சிகளும், அச்சு ஊடகங்களும், பாஜக தவிர்த்து, கோவன் கைதைக் கண்டித்திருக்கின்றன. சர்வதேச மனித உரிமை ஆணையம் கோவன் கைதைக் கண்டித்திருக்கிறது. உச்ச நீதிமன்றமும், இந்தியாவின் பல உயர் நீதிமன்றங்களும் தேசத் துரோக சட்டம் பற்றி பல முறைத் தெரிவித்த கருத்துக்கள் கோவன் கைதில் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன.

கோவன் வழக்கின் இறுதித் தீர்ப்பில் நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இந்த 150 ஆண்டு கால தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு முடிவுரை எழுதினால் அது இந்திய நீதித்துறை சராசரி இந்தியனின் பேச்சுரிமையையும், எழுத்துரிமையையும் காப்பாற்றச் செய்த மிகப் பெரிய காரியமாக இருக்கும்!

English summary
R Mani's special article on Folk Singer Kovan's arrest and Sasikala relative's purchase of Luxe Multiplex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X