For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமக்குள் உள்ள மிருகத்தின் வடிகால்தான் ஜூலி மீதான கோபமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் மற்றும் டபிள்யூடபிள்யூஇ குத்துச்சண்டை நிகழ்ச்சி ஆகிய இரண்டுமே திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்தான் என்கிறார் நமது வாசகர் பாலா.

இதுகுறித்து அவர் என்ன கூறுகிறர் என்று பாருங்கள்: டபிள்யு டபிள்யு ஈன்னு ஒண்ணு வரும் டென் ஸ்போர்ட்ஸ்ல. அதுல ஒருத்தனுக்கொருத்தன் அடிச்சி மூஞ்ச உடைச்சிப்பானுங்க.. பார்க்கற நமக்கு பதைபதைக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கான்செப்ட், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் ஹீரோ / வில்லன் என மாறி மாறி ஓடும். நல்லவன் என சித்தரிக்கப்பட்ட ஒருவன், வெறியோடு சிரித்துக்கொண்டே Steel Chair ஐ கொண்டு நண்பனை அடிப்பான்.. அவன் ரத்தம் சொட்ட சொட்ட எழுந்து பார்த்து "You...! i cant beleive this..!!" என்றவாறு மயங்கிப்போவான்.. மெடிக்கல் டீம் அவனை தூக்கிக்கொண்டு ஓடும்...

 Biggboss is another WWE like scripted programe, says this netizen

அடுத்த கணம் கெட்டவன் நல்லவனாவான், நல்லவன் கெட்டவனாவான். அடிபட்டு ஹாஸ்பிடலில் கிடப்பவன், அடுத்த இரண்டு வாரங்களில் கையில், தலையில் கட்டுடன் வந்து துரோகம் செய்தவனை துவைத்தெடுப்பான். திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் மாலை நேரங்களில் டிவி முன் தவம் கிடந்த காலங்கள் உண்டு, அந்த இரண்டு மணி நேரம் இமைக்ககூட மறந்துபோய் கட்டுண்டு கிடப்போம்...

நானெல்லாம் அதற்கு அடிமையாகவே இருந்த காலமொன்று உண்டு. நான் மட்டுமல்ல, வீட்டில் அம்மாவுக்கும் அதை பழக்கி வைத்திருந்தேன்.. ரெசில் மேனியா என்றொரு ஈவன்ட் நடக்கும், ஞாயிறுகளில் அதை ஒளிபரப்புவார்கள். நான், அம்மா என் நண்பர்கள் புடைசூழ வீட்டை இருட்டாக்கிக்கொண்டு, கையில் ஸ்நாக்ஸ்களோடு செட்டில் ஆகிவிடுவோம்.

2005 சமயத்திலெல்லாம் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு அதை பார்த்திருக்கிறோம். ஒரு கட்டத்தில் எனக்கெல்லாம் முற்றிப்போய் அண்டர்டேகரும் அவர் தம்பி கேன்னும் ஆட்டோல வந்து கோவில் வாசல்ல இறங்குவது போல கனவெல்லாம் கண்டிருக்கிறேன்... கனவில், ஆட்டோவில் இருந்து இறங்கிய கேன், தலையை சிலுப்பிக்கொண்டு முகத்துக்கு முன் கற்றையாக தொங்கும் முடியை தூக்கிவிட்டு என்னை பார்த்தவாறே அனுமார் கோவிலுக்குள் நுழைகிறார்...

கேன நேர்ல பார்த்துட்டேன் என அலறியடித்து எழுந்து, அம்மாவிடம் கதைசொல்லி ஆச்சர்யப்பட்ட காலமெல்லாம் உண்டு. சரவணன் என்னைவிட ஒருபடி மேல்... ராயல் ரம்புலில் ஷான் மைக்கேல்ஸ் வெல்ல வேண்டும் என முருகன் கோவிலில் ஷான் மைக்கேல்ஸ் பெயரில் அர்ச்சனையெல்லாம் செய்தான்.. அங்குள்ள அய்யர் "அடேய்... அவனவன் கோவிலுக்கு புள்ளைங்கள கூட்டிட்டு வந்து லவ் பண்றான்.. நீங்க இன்னும் ரெஸ்லிங் பார்க்குறீங்க.. வெளங்க மாட்டிங்கடா" என எங்களை அர்ச்சனை செய்துவிட்டு போனார்.

2006களில் யூட்யூப் பரிச்சயமாக, அதில் ஷான் மைக்கேலின் சாகசங்கள் என்று தேடினால், "wwe is fake" என்கிற பெயரில் சில வீடியோக்கள் சஜ்ஜஷன் லிஸ்டில் வரும். எதேச்சையாக அந்த வீடியோக்களை பார்க்க, wwe மீதிருந்த மொத்த பிம்பமும் ஒரே நாளில் உடைந்துபோனது.

அதன் பிறகு ஷான் மைக்கேல்ஸ், அண்டர்டேகர் எல்லோரும் அநாதையானார்கள். எப்போதாவது சேனல் மாற்றும்போது ரெஸ்லிங் வந்தால்கூட "டேய் டேய் நடிக்காதிங்கடா" என முணுமுணுத்தவாறே ஸ்கிப் பண்ணுவேன். அம்மா மட்டும் கடைசி வரை நம்பவே இல்லை, நான் பார்ப்பதை நிறுத்தியும் கூட, அம்மா பார்த்துட்டு இருப்பாங்க.. நான் ஏதாவது சொல்ல வாயெடுத்தால் "அடிக்கறதுதான் பொய்யி.. அவனுக்கு வர ரத்தம் பொய்யா? எப்டிடா இவ்ளோ மோசமா போன... உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.. அவன் அடிவாங்கரத பார்த்து சிரிக்கற?" என்பார். "அம்மா அது "பிளட் பாக்கெட்ஸ்" மா என சொல்ல எத்தனித்து அமைதியாகிவிடுவேன்.

பின்னொரு காலத்தில் நிறைய படிக்க ஆரம்பித்த பிறகு சைக்கலாஜிக்கலாக சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது, அடுத்தவன் துன்பப்படுவதை, ரத்தம் சிந்துவதை எல்லாம் ரசித்துப் பார்ப்பது நாகரிக மனிதன் வேடமிட்ட நாமல்ல, நமக்குள் இருக்கும் குரூர மிருகம்தான். அது நம் மனதில் உள்ள மிருகத்துக்கான வடிகால். 'WWE' பொறுத்தவரை அதில் அவர்கள் சிந்துவது உண்மையான இரத்தம் அல்ல என தெரியும்போது அதன் மீதான ஆர்வம் தானாகவே குறைய ஆரம்பித்துவிட்டது.

இதை இப்போது நினைவு கூர்ந்து எழுத காரணம் கூட பிக்பாஸ்தான். இதேதான் அதிலும் நடக்கிறது. ஜூலி மீது மக்களுக்குள்ள கோபத்தையும் ஆத்திரத்தையும் சில பதிவுகளில் பார்க்க நேர்ந்தது. அந்த புள்ள பிசிக்கை பற்றி கூட நிறைய விமர்சனங்கள்! எல்லோரையும் திருப்திபடுத்த "நல்லவர்" என கட்டமைக்கப்பட்டிருக்கும் ஓவியா மூலம் "கெட்டவர்" என உருவேற்றி வைத்திருக்கும் ஜூலியை கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள்.

கவனியுங்களேன்.. கெட்டவர்கள் ஒவ்வொருவராக நல்லவர்கள் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நடிக்காமல் மாட்டிக்கொண்டு இருப்பது ஜூலி மட்டும்தானோ என நினைக்க தோன்றுகிறது. ஏன்னா? மற்றவர்களை போல அந்த புள்ள Profeesional இல்லையே. யார் கண்டது.. பிக் பாசில் கடைசிவரை நின்று வெல்லப்போவது ஜூலியாக கூட இருக்கலாம். எது எப்படியோ... இது ரியலா நடக்குதுன்னு மக்களை நம்ப வைக்கும் வரைதான் வருமானம்..! கொஞ்சம் மிஸ் ஆனாலும் டீ ஆர் பி அதள பாதாளத்துக்கு போயிரும்...!

English summary
Biggboss is another WWE like scripted program, says this netizen with his own experience of watching TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X