For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விபத்தில் சிக்கிய காரில் இருந்து பறந்த 500 ரூபாய் நோட்டுக்கள்: அள்ளி எடுத்த மக்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: விபத்தில் சிக்கிய காரில் இருந்து கட்டுக்கட்டாய் பணம் பறந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் நேற்று கோவையில் நடந்துள்ளது.

கோவை அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து கட்டுக்கட்டாய் கொட்டிய பணத்தை அந்த வழியாக சென்ற மக்கள் பாய்ந்து அள்ளினர். சுதாரித்த போலீசார், ரூ. 2.44 கோடி பணத்தை மீட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். இது ஹவாலா பணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Cash from MUV spills post-accident

ஈரோட்டில் இருந்து கேரளம் நோக்கி சொகுசு கார் ஒன்று, கோவை வழியாக போடிபாளையம் பிரிவு பகுதி புறவழிச் சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக எதிரே வந்த அரசு பேருந்தும், அந்த காரும் எதிர்பாரத விதமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பேருந்தும், காரும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஓட்டுநர் யாசர் அபுபக்கர், கோட்டயத்தைச் சேர்ந்த ஜப்பார், கோழிக்கோட்டை சேர்ந்த ஜலீல் ஆகியோர் காயம் அடைந்தனர்.

கார் மோதிய வேகத்தில், காரின் முன்பக்க கதவு திறந்தது. அப்போது காருக்குள் இருந்து 500 ரூபாய் நோட்டு கட்டுகள் ரோட்டில் சிதறி விழுந்தன.

காற்றில் பறந்த பணம்

சிதறிய ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்தன. அந்த வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மோதிய பஸ்சில் இருந்த பயணிகளும் காரில் இருந்து கட்டு, கட்டாக பணம் ரோட்டில் விழுந்து கிடப்பதை வியப்பாக பார்த்தனர். பலர் தங்களது வாகனங்களை நிறுத்தி ரோட்டில் கிடந்த பணக்கட்டுகளை அள்ளினர். அவற்றை காருக்குள் வைப்பதுபோல் நடித்து சிலர் பணத்தை தங்களுடன் எடுத்துச்சென்றனர்.

தகவல் சொன்ன டிரைவர்

விபத்து குறித்தும், காரில் சிதறிய பணம் குறித்தும் பேருந்தின் ஓட்டுநர் ரமேஷ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை மீட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த பணம் தொடர்பாக வருவாய் துறைக்கும், வருமான வரித்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

500 ரூபாய் கட்டுகள் 490

வட்டாட்சியர் சக்திவேல், வருமான வரித் துறை அதிகாரிகள் மனோஜ், பிரசாந்த், கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீஸார் உதவியுடன் வருமான வரித்துறையினர் சேதமடைந்த காரின் கதவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 830 பணத்தை மீட்டனர். மொத்தம் 490 கட்டுகளில் ரூ. 500 வீதம் பணம் இருந்துள்ளது.

சிதறிக் கிடந்த நோட்டுகளையும் முடிந்தவரை மீட்டனர். விபத்தில் காயமடைந்த மூவரில் ஜலீலை தவிர ஏனைய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஈரோடு டூ கேரளா

ஜலீலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஈரோட்டை சேர்ந்த ரயில்வே கேட்டரிங் ஒப்பந்ததாரர் முஸ்தபா என்பவர் பணத்தை கொடுத்து அனுப்பியதாகவும், கோழிக்கோட்டில் உள்ளவரிடம் பணத்தைக் கொடுக்கச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்துக்கான ஆவணங்களை அவர் காட்டவில்லை.

ஹவாலா பணமா?

இதையடுத்து, பணம் முழுவதையும் வருமான வரித் துறையினர் மீட்டுச் சென்றனர். அது, ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வருமானவரித் துறை ஆய்வாளர் ஒருவரிடம் கேட்டபோது, மீட்கப்பட்ட பணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். ஹவாலா பணமா என்பது குறித்து பின்னர் தெரியவரும் என்றார்.

அள்ளிய கூட்டம்

விபத்தில் சிக்கிய காரில் இருந்து பணம் கட்டுக் கட்டாக சிதறியது காட்டுத் தீ போல அந்தப் பகுதி மக்களிடையே பரவியது. பணத்தை எடுப்பதற்காக மக்கள் பலரும் அப்பகுதிக்கு ஓடோடி வந்தனர். விபத்து நடந்தபோது அந்த பகுதியில் இருந்த சிலர் பணத்தை எடுத்துச் சென்றனர். அவர்களை தடுக்க முடியவில்லை என ஜலீல் தெரிவித்துள்ளார்.

கணக்கில்லாத பணம்

காரின் சீட்டுக்கு அடியிலும், கதவிலும் பணம் வைக்கப்பட்டு இருந்துள்ளது. எவ்வளவு பணம் மொத்தமாக வைக்கப்பட்டிருந்தது என்பதை கொடுத்து அனுப்பியவர், காரில் வந்தவர்களுக்கு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் எவ்வளவு பணம் எடுத்து வந்தார்கள் என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாயமானது எவ்வளவு

கட்டுக் கட்டாக சிக்கிய பணத்தில் முழுமையான தொகையை கணக்கிட்டுதான் வைத்திருக்க முடியும். சில லட்சங்கள் மாயமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதும், போலீஸாரும், வருமான வரித் துறையினரும் காரில் கொண்டு வரப்பட்ட பணம் ரூ. 2,44,95,830 என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

English summary
Several lakhs of rupees concealed in the door panel of a multi-utility vehicle (MUV) fell on the road after the vehicle met with an accident near Madukkarai on Wednesday. Police said that the vehicle, with three occupants, was proceeding from Erode to Malappuram in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X