For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”இலங்கை இனப்படுகொலை மீது புலனாய்வு வேண்டும்” தமிழ் அமைப்பு கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை இனப்படுகொலை மீது பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி மனித உரிமை கருத்தரங்கம் தொடங்கியது.

ஐ.நா. மனித உரிமை அவையின் மீளாய்வுக் கூட்டம் நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தீர்மானம் கொண்டு வருகிறது அமெரிக்கா.

இந்த தீர்மானத்தை வலிமையானதாக மாற்றி அதனை இந்தியா ஆதரிக்க வேண்டும், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் தமிழர் அமைப்புகள் அழுத்தம் கொடுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக இலங்கை இனப்படுகொலை மீது பன்னாட்டு புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் "உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" சென்னையில் கடந்த 2 ஆம்தேதி ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது.

தோழர்கள் ராஜா ஸ்டாலின், சூரிய பிரகாஷ் தலைமையில் இயங்கும் "உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" நடத்திய இந்த கருத்தரங்கத்தில் மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, "பசுமைத் தாயகம்" மாநில அமைப்பாளர் அருள், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மருத்துவர் வேலாயுதம், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் செல்வ பாண்டியன், உலகத் தமிழ் அமைப்பின் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுப் பேசினர்.

"இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் போர்குற்ற புலனாய்வு நடந்தாலும் அதன் ஒரு பகுதியான "இனப்படுகொலை போர் குற்றம்" வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் போர்குற்ற விசாரணை என்ற பெயரை கேட்டு குழப்பம் அடைய வேண்டாம்.

மேலும் தமிழர்கள் வலியுறுத்த வேண்டியது, விசாரணை அல்ல. விசாரணை என்பது ஆய்வறிக்கையில் போய் நிற்கும். ஆனால் செய்யப்பட வேண்டியது புலனாய்வு ஆகும். ஏனென்றால் புலனாய்வு என்பது குற்றப்பத்திரிக்கையில் சென்று நிற்கும். அதன் மூலம் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்" என டி.எஸ்.எஸ்.மணி கூறியுள்ளார்.

"இந்தியாவில் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தேவைகளை விளக்கி, தமிழர்கள் ஒன்று கூடாமல் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் குறை சொல்வதில் பயன் இல்லை" என்று விளக்கினார் மரு. வேலாயுதம்.

"இலங்கையின் உள்நாட்டு புலனாய்வு முறைகள் யாவும் தோல்வி அடைந்தவை. அவை யாருக்கும் நியாயம் வழங்காது. எனவே சர்வதேச புலனாய்வு செய்வதின் மூலமாக மட்டுமே இலங்கையில் நடந்த கொடூரங்களை உலக அரங்கில் அதிகாரபூர்வமாக நிறுவ முடியும்.

முதல் கட்டமாக இது ராஜபக்சேவுக்கும், அதன் மூலம் இலங்கைக்கும் பெருத்த பின்னடைவை உண்டாக்கும்.

பல நாடுகளுக்கு பயண தடை கூட பெற முடியும். அது இலங்கை மீது மேலும் நெருக்கடி கொடுப்பதற்கான முகாந்திரங்களை வழங்கும். எனவே உள்ள ஆதாரங்கள் அனைத்தும் பன்னாட்டு தற்சார்பு உள்ள பன்னாட்டு புலனாய்வுக்கு மிக விரைவில் உள்ளாக்குவது மிகவும் அவசியம்.

இலங்கைக்கு எதிராக இந்த ஆண்டு கொண்டு வரப்படும் எந்த தீர்மானமும் நிச்சயம் வெற்றி பெறும். அதனால் இலங்கை மீது நாம் தொடர்ந்து பல பன்னாட்டு முன்னெடுப்புகளை செய்ய முடியும்" என்று கூறினார் ரா.அருள்.

இந்த கூட்டத்தில் ஐநா மன்றத்தில் இலங்கைக்கு நெருக்கடி உண்டாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த திட்டமிடலுடன், பல்வேறு அமைப்புகள் இணைந்து செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

English summary
A conference against Srilankan’s Massacres held by world Tamil people organization on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X