For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிக கூட்டணி முட்டுக்கட்டையும் திமுகவின் விளம்பர யுத்தமும்

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

தான் யாருடன் கூட்டணி சேரப் போகிறேன் என்பதை இம்மாதம் 20-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கட்சியின் திருப்பு முனை மாநாட்டில் அறிவிக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநாட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால் வழக்கம் போலவே எந்த அறிவிப்பும் வெளியிடப் படவில்லை. மாறாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இரண்டு திராவிடக் கட்சிகளையும் சாடினார். இதில் அஇஅதிமுக வை கடுமையாகவும், திமுகவை மென்மையாகவும் சாடினார்.

ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசினார் பிரேமலதா. பிரேமலதாவின் தரந்த தாழ்ந்த விமர்சனம் இந்தத் தேர்தலில் கீழ்த்தரமான அரசியல் பேச்சுக்களுக்கு எந்தப் பஞ்சமும் இருக்காதென்பதற்கு கட்டியக் கூறுவதாக இருந்தது.

ஆனால் விஜயகாந்த் தன்னுடைய உரையில் திமுகவை பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. அஇஅதிமுகவை விளாசினார். ஆனால் கூட்டணி குறித்து முடிவு எதையும் அறிவிக்கவில்லை.

‘தான் கிங் காக இருக்கவே விரும்புகிறேன் ... கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை ...' என்றார் விஜயகாந்த். இதன் பொருள் தானே முதலமைச்சர், தனது ஆதரவில் எவரும் முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர தான் விரும்பவில்லை என்பதுதான்.

இது பாஜகவுடனான விஜயகாந்தின் நெருக்கத்தை காட்டுவதாக இருந்தது. அவர் திமுக கூட்டணிக்கு வர மாட்டார், மாறாக பாஜக கூட்டணியில் தான் சேரப் போகிறார் என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் மற்றோர் கருத்தையும் விஜயகாந்த் பேசினார்.

DMK pressure on DMDK leader Vijayakanth for alliance

‘கூட்டணி குறித்து நான் யோசனை செய்து வருகிறேன்' என்பதுதான் அது. இதுதான் பொடி வைத்துப் பேசிய பேச்சாகப் பார்க்கப் படுகின்றது. திமுகவுக்கான ஆசை வார்த்தையிது. தற்போது திமுக வட்டாரங்களில் சொல்லப் படுவது இதுதான் ...

‘பேச்சுவார்த்தை முட்டுக் கட்டையாகி நிற்கிறது. கொஞ்சம் விட்டும் பிடிக்கலாம் என்றுதான் திமுக தலைவர் சொல்லியிருக்கிறார். ரொம்பவும் மெனக் கெட வேண்டாம். ரொம்பவும் கீழே இறங்கிப் போக வேண்டாம்' என்பதுதான் திமுக தலைவரின் அணுகுமுறையாக இருக்கிறது. செஸ் விளையாட்டில் ஒரு கட்டம் வரும். அதாவது இரண்டு தரப்பும் தங்களது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வர முடியாத சூழல் வரும். எந்தப் பக்கமும் திரும்ப முடியாது, உதறி விட்டும் போக முடியாது.

இதனை அவரவர் நிலைப்பாட்டில் அவரவர் சிறைப்பட்டுப் போனார்கள் என்றும் சொல்லாம். அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.

தேமுதிகவின் பிரச்சனை கட்சியில் 99 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் திமுகவுடன்தான் போக விரும்புகிறார்கள். இதுதான் கள யதார்த்தம். இதற்கு காரணம் கொள்கை, கத்திரிக்காய் என்பதெல்லாம் கிடையாது. அஇஅதிமுக வுக்கு அடுத்த வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது திமுக தான். அதனுடன் போனால்தான் போட்டியிடும் இடங்களில், கெளரவமான வெற்றியைப் பெற முடியும். மேலும். தேர்தல்களை சமாளிக்க, அடிப்படை அத்தியாவசியத் தேவையான வைட்டமின் ‘ப' வும் வேண்டியளவுக்கும் கிடைக்கும்.

தற்போது திமுக தலைமைக்கு இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், வைட்டமின் ‘ப' வை தேமுதிகவுக்கு திகட்ட, திகட்ட கொட்டிக் கொடுக்கும் அளவுக்கும் தயாராகவே இருக்கிறார்கள்தான். காரணம் இது திமுகவுக்கு ஒரு வகையில் வாழ்வா, சாவா தேர்தல்தான்.

கடந்த இரண்டு தேர்தல்களில் 2011 சட்டமன்றம் மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் படுதோல்வியடைந்து மண்ணைக் கவ்விய திமுக இந்த முறையும் தோற்றால் கடையை மூட வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். ஆகவே எதனையும் செய்து எப்பாடு பட்டாவது விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்கவே திமுக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் விஜகாந்தின் மனைவி பிரேமலதா பாஜக கூட்டணியையே அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த கட்சியும் திமுக பக்கம் போக விரும்புவதும், தலைமைக்கு நெருக்கமானவர் பாஜக பக்கம் நாடுவதும் தான் இந்த இழுபறிக்குக் காரணம். ஒவ்வோர் முறை ‘தம்பதியர்' தேமுதிக நிருவாகிகளை அழைத்துப் பேசும்போதும் அவர்கள் திமுக கூட்டணி தான் வேண்டும் என்று கூறுவது இறுதி முடிவு எடுக்க வேண்டியவர்களை கோபப்படுத்தி விடுகிறது.

ஒவ்வோர் சமயம் பிரேமலதா ‘அப்படியென்றால் நீங்களே திமுக கூட்டணிக்கு பேசுங்கள்' என்று கூறி விட்டு எழுந்து சென்று விடுகிறாராம். மறுபக்கத்தில் பாஜகவும் மிக கடுமையாக தேமுதிகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

எப்பாடு பட்டாவது தேமுதிகவை தங்கள் பக்கம் கொண்டு வந்து விட முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. எந்த எல்லைக்கும் போய் தேமுதிக வை தங்கள் பக்கம் வளைக்க பாஜக நினைப்பதாகத் தெரிகிறது.

அதே சமயத்தில் பிடி கொடுக்க மறுக்கும், விஜயகாந்த்தை வழிக்கு கொண்டு வர சற்றே விட்டுப் பிடிக்க திமுக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் சில நாட்களை இப்படியே ஓட்ட திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜயகாந்த்துடன் திமுக சார்பில் பேசிக் கொண்டிருப்பவர்கள் சில தொழிலதிபர்கள். அரசியல்வாதிகளைத் தவிர்த்து சில தொழிலதிபர்களை வைத்து பேச்சு வார்த்தையை திமுக தலைமை நடத்திக் கொண்டிருப்பது திமுக அரசியல்வாதிகளுடன் அவ்வளவு சுலபமாக மனம் விட்டு பேச விஜயகாந்த் தயங்குவதுதான் என்றே கூறப்படுகின்றது.

மேலும் தொழிலதிபர்களை பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியிருப்பது இந்த விவகாரம் வைட்டமின் ‘'ப'' வுடன் நெருக்கமாக சம்மந்தப்பட்டிருப்பதுதான் என்றும் கூறப்படுகிறது.

விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் நின்று கொண்டிருப்பது திமுக தலைமையை நெருக்கடிக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தேமுதிக கூட்டணி வந்தால்தான் இந்த முறை ஜெயலலிதாவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற எண்ணம் திமுகவில் சாமானியத் தொண்டனுக்கும் ஏற்பட்டு விட்டது.

ஒருவேளை கூட்டணி வராவிட்டால் நிச்சயம் அது திமுகவுக்கு பின்னடைவாகவே கருதப்படும். மனதளவில் கூட இது திமுக தொண்டனை சோர்வடைய தான் செய்யும். காங்கிரஸ் கூட்டணியை அவசர அவசரமாக அறிவித்ததே பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கப் போகிறதென்ற பேச்சை முளையிலேயே கிள்ளி எறிய மட்டுமல்ல, மேலும் இதற்கான முக்கியமான காரணம் இதுதான்.

அதாவது திமுகவுடன் கூட்டணி சேர எந்தக் கட்சியும் இல்லையென்ற எண்ணத்தை சிதறடித்து கட்சிகள் திமுகவுடன் சேரத் தயாராக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்ததான்.

இதன் மற்றோர் படிதான் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் முக்கியமான நாளிதழ்களில் திமுக சார்பில் கொடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் முழுப் பக்க விளம்பர ங்கள். ‘என்னம்மா இப்படி பன்றீங்களேமா?' என்று பெயர் குறிப்பிடாமல், இந்த விளம்பரங்கள் ஜெயலலிதாவை சீண்டிக் கொண்டிருக்கின்றன. தேர்தல்களுக்கு இன்னமும் இரண்டரை மாதங்களுக்கு மேல் இருக்கின்றன.

அதற்குள் இந்த விளம்பரங்களை வெளியிடுவதன் பிரதான நோக்கமே நேரடியாகவே தேர்தல் பிரச்சாரத்தில் திமுக குதிப்பது தான். தேர்தல் அறிவிக்கையே வெளியிடப்படாத போது பக்கம் பக்கமாய் விளம்பரங்களை திமுக வெளியிட்டுக் கொண்டிருப்பதான் நோக்கம் ... ‘நாங்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டோம் .... யார் வந்தாலும் வரா விட்டாலும்' என்ற செய்தியை உணர்த்தத்தான்... இதுவரையில் இந்த விளம்பரங்களுக்கு சில கோடிகள் செலவாகியிருக்கும்.

இவ்வளவு தொகையை இப்போதே செலவிட வேண்டிய அவசியம் ஒரு விதத்தில் திமுகவின் பதற்றத்தைத் தான் காட்டிக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டும் தேர்தல்களை சந்திக்கத் திமுக தயார் என்பதை விஜயகாந்துக்கு உணர்த்துவதுதான் இந்த விளம்பரங்களின் நோக்கம். கூட்டணிகளே இன்னமும் இறுதியடையாத சூழ்நிலையில் கோடி கோடியாய் செலவழித்து விளம்பரங்களை வெளியிடுவதென்பது வழக்கமாக திமுக செய்யாத காரியம்.

ஆனால் இந்த முறை வேறு வழியில்லை காரணம் கேப்டன், தமிழின தலைவருக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தல் அறிவிக்கை வெளியிடப் படுவதற்கு முன்பே கோடி கோடியாய் பணத்தை பிரதான எதிர்கட்சி கொட்டத் துவங்கி விட்டது.

எதிர்கட்சி இப்போதே இவ்வளவு செலவு செய்கிறதென்றால், தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்குப் பதிவு நாள் நெருங்க நெருங்க வும் எவ்வளவு பணம் செலவு செய்யப் போகிறது என்பதை யூகிப்பது பெரியதோர் விஷயம் அல்ல. எதிர்கட்சியே இவ்வளவு செய்கிறதென்றால் ஆளுங் கட்சி என்ன செய்யப் போகிறதென்பதை புரிந்து கொள்ளுவது சுலபம்தான். கோடி, கோடியாய் பணம் ஆறாய் ஓடப் போகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தேர்தல்களில் பணம் புழங்குவது தமிழகத்தில் தான் அதிகம். யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், சேராவிட்டாலும், இந்த தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அது சாமானிய மனிதனுக்கு அவனது வாழ்வில் கிஞ்சித்தும் மாற்றத்தை ஏற்படப் போவதில்லை என்பதுதான் மறுக்க முடியாத ஒரே உண்மை ............

English summary
DMK has put the pressure on DMDK leader Vijayakanth to take a decision on joining alliance for upcoming elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X