For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்ததும் ராமதாஸ் நினைவில் வந்த 'ரொட்டியும், கேக்'கும்!

Google Oneindia Tamil News

சென்னை: பிரான்ஸ் நாட்டை 217 ஆண்டுகளுக்கு முன் 18 ஆம் நூற்றாண்டில் பதினான்காம் லூயி மன்னன் ஆட்சி செய்த போது கடுமையான வறட்சி நிலவியது. மக்கள் உணவின்றி தவித்தனர். இதை மன்னனின் கவனத்திற்கு ஆலோசகர்கள் கொண்டு சென்றனர். அப்போது உடனிருந்த மன்னனின் மனைவி மேரி அண்டோனியா, ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று கூறினாராம். அதிமுகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்ததும் இது தான் நினைவுக்கு வந்தது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு மாநிலம் முன்னேற வேண்டுமானால் தொழில்துறை வளர்ச்சியடைய வேண்டும்; அனைவருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி கிடைக்க வேண்டுமானால் வேளாண்துறை முன்னேற வேண்டும்; அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான சிறந்த செயல்திட்டத்தை முன்வைக்கும் கட்சி தான் முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சியாக இருக்கும். முன்னேற்றத்திற்கான திட்டம் எதையும் அறிவிக்காமல், இலவசங்களை வாரி இறைத்து தமிழகத்தை இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் ஜெயலலிதா. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Dr Ramadoss slams ADMK for copying his party's manifesto

அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஒரு செல்பேசி இலவசமாக வழங்கப்படும், மகளிர் பணிக்கும், வேறு இடங்களுக்கும் எளிதில் சென்று வர வசதியாக இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டை 217 ஆண்டுகளுக்கு முன் 18 ஆம் நூற்றாண்டில் பதினான்காம் லூயி மன்னன் ஆட்சி செய்த போது கடுமையான வறட்சி நிலவியது. மக்கள் உணவின்றி தவித்தனர். இதை மன்னனின் கவனத்திற்கு ஆலோசகர்கள் கொண்டு சென்றனர். அப்போது உடனிருந்த மன்னனின் மனைவி மேரி அண்டோனியா, ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று கூறினாராம். அதிமுகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்ததும் இது தான் நினைவுக்கு வந்தது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 86 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, வேலை கிடைக்காது என்ற விரக்தியில் கடந்த 5 ஆண்டுகளில் 67 லட்சம் பேர் பதிவை ரத்து செய்துள்ளனர். மொத்தம் 1.39 கோடி பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 72 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ள நிலையில், ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக செல்பேசி வழங்குவதும், 50% மானியத்தில் இரு சக்கர ஊர்தி வழங்குவதும் தமிழகத்தை மட்டுமின்றி தமிழக மக்களையும் மீள முடியாத புதைகுழியில் தள்ளிவிடும். இது மிகவும் பிற்போக்குத்தனமான அணுகுமுறையாகும்.

அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். கடந்த 31.7.2015 அன்று நிலவரப்படி மின் இணைப்பு பெற்ற வீடுகளின் ஏண்ணிக்கை 1.88 கோடி ஆகும். இன்றைய நிலவரப்படி இது 2 கோடியை தாண்டியிருக்கும். அதன்படி 2 மாதங்களுக்கு 200 கோடி யூனிட் வீதம் ஆண்டுக்கு 1200 கோடி யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டியிருக்கும். வீடுகளுக்கு அதிகபட்சமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.5.75 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இலவச மின்சாரத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.6900 கோடி செலவழிக்க வேண்டியிருக்கும்.

மின்சார வாரியம் சமாளிக்க முடியாத இழப்பிலும், கடன் சுமையிலும் தத்தளிப்பதாகக் கூறி கடந்த ஆட்சியில் இரு கட்டங்களில் ரூ.15,000 கோடிக்கு மின்கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதா இப்போது கூடுதலாக ஏற்படும் இழப்பை எப்படி சமாளிப்பார்? மின் வாரியம் ஆண்டுக்கு ரூ.13,000 கோடி இழப்பில் இயங்குகிறது. மின்வாரியத்தின் கடன் ரூ. 1.60 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இப்போது ஆண்டுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் இழப்பு ஏற்படுவதாகக் கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளில் மின்வாரியக் கடன் ரூ.2.60 லட்சம் கோடியை தாண்டி விடும். அதன்பின் தமிழ்நாடு மின்சார வாரியத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 18,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுமாம். 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 2013 ஆம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்த ஜெயலலிதா இன்று வரை கூடுதலாக ஒரு மெகாவாட் கூட உற்பத்தி செய்யவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 17,340 மெகாவாட் அனல் மின் திட்டங்களில் ஓரு திட்டம் கூட செயல்படுத்தப்படாத நிலையில், கூடுதலாக 18,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் போவதாக கூறுவதைப் பார்க்கும்போது கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் மீதேறி வைகுண்டத்தை வளைக்கப் போவதாக கூறிய பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

பொங்கல் திருநாளுக்கு ரூ.500க்கு பரிசுக் கூப்பன் வழங்கப்படும், இலவச செட்டாப் பெட்டி வழங்கப்படும் என்பதெல்லாம் மக்களை இலவசங்களுக்கு கையேந்த வைக்கும் மோசமான திட்டங்கள் தான். மது ஆலைகளுக்கு மொலாசஸ் தேவை என்பதற்காக கரும்பு ஆலைகளில் எத்தனால் உற்பத்தி செய்ய தடை விதித்த ஜெயலலிதா, இப்போது எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்பது நல்ல நகைச்சுவை. மீனம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைக்கப்படும்; கோவையில் பறக்கும் சாலை அமைக்கப்படும் என்பதும் வெற்று அறிவிப்பு தான். மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையிலான பறக்கும் பாலம் திட்டத்தை முடக்கிய ஜெயலலிதா இந்த திட்டங்களை செயல்படுத்துவார் என்று நம்புவதை விட சிறந்த முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மோனோ ரயில் அமைக்கப்படும், அம்மா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதெல்லாம் கடந்த முறை அறிவித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆகும். அவற்றை மீண்டும் ஒருமுறை அறிவித்து தமிழக மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்ற முயன்றிருக்கிறார் ஜெயலலிதா.

தமிழ்நாட்டில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாகவே லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்; பொதுசேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போது இவை இரண்டுமே தேவையில்லை என்று கூறிய ஜெயலலிதா இப்போது திடீர் ஞானம் வந்தவரைப் போல லோக் அயுக்தா ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பொய் வாக்குறுதியை நம்பி ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை.

புதிய கிரானைட் கொள்கை, புதிய தாது மணல் கொள்கை வகுக்கப்பட்டு அவற்றை அரசே விற்பனை செய்யும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலிருந்து காப்பியடிக்கப் பட்டதாகும். கடந்த 25 ஆண்டுகளாக கிரானைட் மற்றும் தாதுமணல் கொள்ளையை ஊக்குவித்த அதிமுகவும், திமுகவும் இதுபோன்ற வாக்குறுதிகளை அளிப்பது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மொத்தம் 29 திட்டங்கள் பா.ம.க. தேர்தல் அறிக்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்டவை ஆகும். தோல்வி பயம் காரணமாகவே இலவச அறிவிப்புகளையும், வெற்றுத் திட்டங்களையும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் நம்பி ஏமாந்த காலம் முடிந்து விட்டது. இத்தேர்தலில் பா.ம.க.விடம் ஜெயலலிதா வீழ்ச்சியடைவது உறுதியாகி விட்டது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has slammed ADMK for copying his party's manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X