For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல் நிலையத்திலேயே என்கவுண்டர் செய்யும் அளவுக்கு போலீஸுக்கு சுதந்திரமா?: விஜயகாந்த்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இதுநாள் வரையிலும் காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்கு புறமான மலைபகுதிகளுக்கு அழைத்து சென்று கொலை செய்தனர். ஆனால் தற்போது காவல் நிலையத்திலேயே வைத்து கொலை செய்யும் அளவிற்கு இந்த ஆட்சியில் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா? என மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Encounter in police station?: Condemns Vijayakanth

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என தெரியவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் குற்றவாளி ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு இதுவரை விடை தெரியவில்லை. தமிழகம் முழுவதும் அப்பாவிகளும், சிறு சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களும், வன்முறை வழக்கில் குற்றவாளிகளாக ஆக்கப்படுகின்றனர் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது.

உண்மையாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. பெயரளவிற்கு மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பேருந்தை கொளுத்தியவர்கள், கடைகளை அடித்து நொறுக்கியவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என அனைவருமே சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய காவல்துறை கைகட்டி, வாய்மூடி மவுனியாக வேடிக்கை பார்க்கிறது.

தமிழ்நாட்டில் தினந்தோறும் கொலைகளுக்கு பஞ்சம் இல்லை, கொள்ளையும், திருட்டும் சர்வ சாதாரணமாகிவிட்டது. எதிர்கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி வழங்குவதில்லை. இந்த அளவில் காவல்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதே என்று தமிழக மக்கள் எண்ணுகின்ற வேளையில், தற்போது நடந்துவரும் சம்பவங்கள் தமிழக மக்களை அதிர்சி அடைய செய்துள்ளது. நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது காவல்துறையின் கொடூர ஆட்சியா? என தெரியவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுக்கா, எஸ்.பி.பட்டிணத்தை சார்ந்த செய்யது முகமது என்ற இளைஞரை, தகராறு செய்ததாக சொல்லி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கே கடுமையாக தாக்கப்பட்டு, அந்த காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் காளிதாஸ் என்பவர் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து இருக்கிறார். இதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இதுநாள் வரையிலும் காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்கு புறமான மலைபகுதிகளுக்கு அழைத்து சென்று கொலை செய்தனர். ஆனால் தற்போது காவல் நிலையத்திலேயே வைத்து கொலை செய்யும் அளவிற்கு இந்த ஆட்சியில் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா? என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒரு சிறுவனை காவல் ஆய்வாளர் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்ற காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இச்செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதுடன். காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் காவல்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMDK chief Vijayakanth condemned the killing of a youth in a police station in Ramnad district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X