போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் டிஸ்மிஸ் செய்யமுடியும் - நீதிபதிகள் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஒரு மணிநேரத்தில் பணியில் இருந்து நீக்கமுடியும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு சார்பில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

HC bench orders Teachers and Govt Staffs to withdraw the strike

இதற்கு தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாகாது என்று கூறி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு, விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் தடை விதித்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதால், இதனால் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சேகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதன் பிறகும் சென்னை திருவல்லிக்கேணியில் சங்க நிர்வாகிகள் செப்டம்பர் 9ஆம் தேதி கூட்டம் நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்றதாகவும், இவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதியன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 74,675 ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியது. வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தடையை நீக்கக்கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யாமல், வேலை நிறுத்தத்தை தொடர்வது நீதிமன்ற அவமதிப்பதாகும். இதனால் நீதிமன்ற உத்தரவை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் கடந்த செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு மனு தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து இன்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது நிர்வாகிகளிடம், நிபந்தனையின்றி போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.

போராட்டத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தை முடியும் என்றும் திங்கட்கிழமையன்று தலைமை செயலாளரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் போராட்டத்தை தொடர்வது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீதிமன்ற உத்தரவை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

போராட்டத்தை வாபஸ் பெற ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தயக்கம் காட்டினர். இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவாதம் அளித்தும் தயக்கம் காட்டுவது ஏன் என்று கேட்ட நீதிபதிகள், அரசு ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் பணியில் இருந்து நீக்க முடியும் என்று எச்சரித்தனர். கலந்து ஆலோசித்து உங்களின் கருத்தை தெரிவியுங்கள் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

2 மணிக்குள் பணிக்குள் செல்ல வேண்டும் என்றும் 21ஆம் தேதியன்று தலைமைச் செயலர் பேச்சுவார்த்தைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madurai bench of Madras HC has ordered the striking Teachers and Govt Staffs to withdraw the strike immediately.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற