சென்னை மழை வெள்ளத்தை இப்படியும் கட்டுப்படுத்தலாம்... செய்வார்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னை மழை வெள்ளத்தை இப்படியும் கட்டுப்படுத்தலாம்...வீடியோ

  சென்னை ஒரு கடற்கரை நகரம். ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை நன்னதிகளாக இருந்த அடையாறு, கூவம், கொற்றலை ஆகியவற்றின் கழிமுகப் பகுதி. கடலொட்டிய நகரம் என்பதால் கடலில் திரளும் புயல்மழையின் எளிய இலக்கு. இன்று மட்டுமில்லை, இனி ஆண்டுதோறும் இத்தகைய பெருமழை பெய்யத்தான் போகிறது.

  நகரத்திற்கு இன்னும் மும்மடங்கு வளர்ச்சியும் மீதமிருக்கிறது. மக்கள் தொடர்ந்து இங்கே வந்து குவிவார்கள். கட்டடங்கள் பெருகத்தான் போகின்றன. இனி ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது வெள்ளக்காடாகும் சென்னையைச் செய்திகளுக்குப் பலிகொடுத்துவிட்டுச் செய்வதறியாதவர்களாக நாம் நிற்கவிருக்கின்றோமா?

  Here is the way to control Chennai flood

  ஒவ்வொரு முறையும் இடுப்பளவுத் தண்ணீரில் நம் கட்டடங்கள் ஊறி நின்றால் அவற்றின் வாழ்நாள் பாதியாகக் குறையும் அச்சுறுத்தல் இருப்பதை அறியுங்கள். மழை வெள்ளத்திற்கு நாம் வீட்டுக்குள் பதுங்கிக்கொள்வதால் பாதுகாப்பாகிவிட்டோமா ? நம் வீட்டைச் சுற்றிலும் சூழ்கின்ற மழை நீர் வெள்ளம் கட்டடத்தின் அடித்தளத்தை நெகிழ்த்திக்கொண்டிருப்பதை உணருங்கள். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு ? நம்மைப் போன்ற இடரில் உலகின் வேறு ஏதேனும் நகரங்கள் சிக்கித் திணறுகின்றனவா ? அங்கே ஏதேனும் தீர்வு காணப்பட்டுள்ளதா ? ஆம்.

  ஜப்பானின் டோக்கியோ நகரம் இத்தகைய நெருக்கடிகளால் செத்து செத்துப் பிழைத்தது. சென்னையை விடவும் மும்முடங்கு மக்கள் வாழும் உலகின் மிகப்பெரிய நகரம். டோக்கியோவில் மூன்று கோடி மக்கள். சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடிதான். வளர்ந்த ஐரோப்பிய அமெரிக்க நகரங்களை விடவும் பல்வேறு பட்டியல்களில் முதலிடம் பெறும் நகரம் டோக்கியோதான். அந்நகரம் பசிபிக் பெருமாக்கடலின் கரையில் இருக்கிறது.

  பசிபிக் கடலோடு ஒப்பிட்டால் சென்னைக் கடலான குணகடல் (வங்காள விரிகுடா) வெறும் ஏரிதான். அந்தப் பசிபிக் கடலிலிருந்து உருவாகி மழையாய் அடித்து நொறுக்குபவற்றுக்குப் புயல்கள் என்று பெயரில்லை. டைபூன்கள் என்று பெயர். அவை நகரத்தைத் தாக்கினால் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான கால வரம்புக்குள் 100 மிமீக்கும் மிகுதியான மழையைப் பொழிந்து தள்ளும். அப்படியானால் அந்நகரில் எவ்வளவு வெள்ளம் பெருகும்...! எண்ணிப் பாருங்கள்.

  Here is the way to control Chennai flood

  அதுவுமில்லாமல் டோக்கியோவின் சுற்றுநிலப்பகுதியில் சுமார் நூறு சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கடல் மட்டத்திற்கும் கீழே இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று பேராறுகளின் கழிமுகப் பகுதியாகவும் டோக்கியோ மாநகரப் பகுதி இருக்கிறது. நகரத்திற்குள் சிறிதும் பெரிதுமாய்ப் பல கால்வாய்களும் ஓடுகின்றன. இவ்வளவு தண்ணீர்ச் சூழலுள்ள அந்நகரம் முற்காலத்தில் ஒவ்வொரு மழையின்போதும் வெள்ளத்தில் மிதந்தது. இன்று அங்கே வெள்ளமே இல்லை. எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டுபிடித்துவிட்டார்கள். என்ன செய்தார்கள் ?

  வெள்ளம் என்பது என்ன ? மழை பெய்யும்போது மிகக்குறைந்த காலநேரத்திற்குள்ளாக பேரளவுத் தண்ணீர் நிலத்திற்கு மேலாகப் பெருகிவிடுவதுதான் வெள்ளம். அதற்குத் தீர்வு என்ன ? நிலத்திற்கு மேலாகப் பெருகும் நீரை நிலத்திற்குக் கீழாகச் செலுத்திவிடுவதுதான் தீர்வு. அதைத்தான் டோக்கியோவில் செய்தார்கள்.

  முதற்கண் நகரமெங்கும் மழைநீர்ச் சிறுவழிகளை நிலத்திற்குக் கீழாக அமைத்தார்கள். அம்மழைநீரை நகரத்திற்குள் ஊடுபாவாகச் செல்லும் ஆற்றுக்குள்ளும் கால்வாய்களுக்குள்ளும் செலுத்தினார்கள். இதனால் அவ்வாறுகளில், கால்வாய்களில் கரையை உடைக்கும் வெள்ளம் பெருகும். அதைத் தீர்க்கத்தான் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு திட்டத்தை வகுத்தார்கள்.

  Here is the way to control Chennai flood

  நிலத்திற்குக் கீழே சுமார் 210 அடிகள் ஆழத்தில் மிகப்பெரிய ஏரிகளின் பரப்பளவுக்கு இணையான நிலத்தடி அணைகளைக் கட்டினார்கள். என்னதான் மழை பெய்தாலும் ஓர் அணையோ ஏரியோ நிரம்பும். அவ்வளவுதான் இந்த மழையின் பிரச்சினை. அதைத்தான் செய்தார்கள். மேலே நெரிசலான நகரப் பகுதி வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருக்க நிலத்திற்குக் கீழே நீர்நிலை அணைகள். நிலத்தடியில் திரண்டுருண்ட கட்டுமானத் தூண்களை அமைத்து பெருங்கொள்ளளவுத் தொட்டிகளாக அவற்றைக் கட்டினார்கள். தேங்கும் நீரும் பெருவெள்ளமும் உடனே கட்டுக்குள் வந்தன. இப்போது என்ன மழையடித்தாலும் நகரத்தின் சாலைகள் வாசல் தெளித்து விட்டதைப்போலவே இருக்கின்றன.

  சென்னையின் இந்தப் பேரிடரை மனத்தில் கொண்டு, நம் நகரின் இடையூர்ந்து செல்லும் ஆறு கால்வாய் வழித்தடங்களின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, டோக்கியோவில் செய்தவாறு நிலத்தடி நீர்வடிகாற் பெருவழிகளை ஏற்படுத்தி வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஒவ்வொரு மழைக்கும் சென்னையின் கட்டுமானங்கள் உறுதியிழந்தபடியே இருக்கும்.

  ஒவ்வொரு முறையும் பெரும்பொருட்செலவில் வெள்ளத் தடுப்பு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மக்கள் படும் துன்பங்களைத் தீர்க்க முடியாது. இது குறித்து நாம் மேலும் கலந்துரையாடியும் ஒரு தெளிவுக்கு வரலாம்.

  டோக்கியோ மட்டுமில்லை, மெக்சிகோவின் தலைநகரமான மெக்சகன் சிட்டியைச் சுற்றிலும் மலைகள். ஒரு தேங்காய்த் தொட்டியின் நடுப்பகுதி போன்ற தாழ்ந்த நிலப்பகுதியில்தான் அந்நகரம் அமைந்திருக்கிறது. நகரின் மையத்தை விட்டு ஒரு துளித் தண்ணீரும் வெளியே செல்ல வாய்ப்பில்லை. ஆனால், அங்கே சாக்கடையை வெளியேற்றுவதற்கு நிலத்தடி ஆழ்சுரங்கக் கால்வாய் வழிமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

  டோக்கியோ நகரத்தின் வெள்ளத்தடுப்பு முறைமைகளையும் நான் கூறியவற்றின் விளக்கத்தையும் கீழேயுள்ள காணொளியில் கண்டு உணர்க. தற்காலிக வழிமுறைகளிலேயே காலத்தைக் கழித்துச் செல்வதில் பயனில்லை. நாமாக நம் குரலை ஓங்கி ஒலித்தால்தான் தீர்வு கிடைக்கும்.

  - கவிஞர் மகுடேசுவரன்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Is there any way to control rain floods and save Chennai? Here is the way. Just follow Japan's technique.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற