For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதான ஐஎஸ்ஐ உளவாளி சென்னையில் விமானப் பயிற்சி பெற்றவர்!- திடுக் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி இங்கு விமானப் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சென்னையின் முக்கிய இடங்களை படம்பிடித்து அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ISI spy was bartender in 2009 Army party in Chennai

சென்னை சாலிகிராமத்தில் புதன் கிழமை இரவில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராஜன்(28) கைது செய்யப்பட்டார். அருண் செல்வராஜின் பெற்றோர் இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அங்கு சொந்தமாக ஓட்டல் வைத்து வசதியாக வாழ்ந்துள்ளனர். அங்கு அடிக்கடி போர் ஏற்பட்டதால் குடும்பத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் சென்னை வந்துவிட்டனர். இதனால் அருண் செல்வராஜன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். அதன் பின்னர் அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் கொழும்புவில் குடியேறினர்.

கொழும்புவில் வசித்த போதே ‘ஐஸ் ஈவண்ட்' என்ற கலை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை தொடங்கினார் அருண். இந்நிலையில் ஓட்டல் தொழில் நலிவடைய அருணின் குடும்ப பொருளாதாரமும் இறங்கியது. அடுத்து என்ன செய்வது என்று அருண் திணறிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஆட்டோக்காரர் ஒருவர் மூலம் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தொடர்பு கிடைத்துள்ளது.

தமிழகம் வந்த அருண் செல்வராஜ்

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் 2009-ம் ஆண்டு அருண் செல்வராஜன் மட்டும் மாணவர் விசாவில் மீண்டும் சென்னை வந்தார். சாலிகிராமம் ஜே.கே.சாலையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக ஒரு வீடு எடுத்து குடியேறினார்.

சென்னையில் அலுவலகம்

இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு வசதியாக இந்திய பாஸ்போர்ட் ஒன்றையும் ஐ.எஸ்.ஐ. எடுத்து கொடுத்திருந்தது. இலங்கையில் வைத்திருந்த 'ஐஸ் ஈவண்ட்' நிறுவனத்தை அதே பெயரில் சென்னையிலும் தொடங்கினார் அருண். இதற்காக தனி இணையதளத்தையும் உருவாக்கி சென்னையில் பல விஐபிக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

கலை நிகழ்ச்சி போர்வையில்

அதை பயன்படுத்தி பாதுகாப்பு கட்டுப்பாடு உள்ள அரசு நிலைகளுக்குள் கூட அருண் சென்று வந்தான். கலை நிகழ்ச்சிகள் நடத்தும்போது, முக்கிய இடங்களை படம் பிடித்தான். அவற்றை எல்லாம் தன் லேப்-டாப்பில் இருந்து கொழும்பு தூதரகத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. அதிகாரிக்கு அனுப்பி வந்தான்.

பாகிஸ்தான் உளவு அமைப்பு

அருண் மூலம் தகவல்கள் வந்து குவிவதை கண்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு, அவனை தென் மாநிலங்களில் முக்கிய ராணுவ நிலைகளுக்கு சென்று படம் எடுத்து அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து அருண் தனது ஐஸ்ஈவென்ட் நிறுவனத்துக்கு பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் 2 கிளைகளைத் தொடங்கினான்.

கடற்படைத்தளங்கள்

இந்த கிளைகள் மூலம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ளவர்களுடனும் அருணுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவன் கொச்சி கடற்படை தளம், விசாகப்பட்டினத்தில் உள்ள நீர்மூழ்கி தளம் பற்றிய தகவல்களை சேகரித்து அனுப்பினான்.

அமுக்கிய உளவுத்துறை

இந்த நிலையில் அருண் செல்வராஜன் உத்தரபிரதேச மாநிலம் மெகராதபாத்தில் உள்ள ஒரு வங்கி மூலம் லட்சக்கணக்கான பணத்தை பரிமாற்றம் செய்வதை உளவு துறை கண்டுபிடித்து தேசிய விசாரணைக் குழுவிடம் தெரிவித்தது. இதனால் உஷாரான தேசிய விசாரணை குழுவினர், இனியும் இவனை விட்டு வைக்கக் கூடாது என்று கைது செய்து விட்டனர். பிறகு சாலி கிராமத்தில் உள்ள அவன் வீட்டிலும், நுங்கம்பாக்கம், பெங்களூர், ஐதராபாத் அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள்.

லேப்டாப், செல்போன்கள்

இந்த வேட்டையில் 2 லேப்-டாப், 2 செல்போன், ஏராளமான சிம் கார்டுகள், நவீன காமிராக்கள், டேட்டா கார்டுகள், பென்டிரைவ்கள், லட்சக்கணக்கில் பணம் சிக்கியது. லேப்-டாப்களை சோதித்தபோது சென்னையில் உள்ள பல முக்கிய பகுதிகளின் நூற்றுக்கணக்கான படங்களையும், வீடியோ காட்சிகளையும் அருண், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அதிகாரிக்கு அனுப்பி இருப்பது உறுதியானது.

5 ஆண்டுகளாக சதி

கடந்த 5 ஆண்டுகளாக அவன் இந்த சதி செயலை செய்து வந்துள்ளான். அவன் அனுப்பிய படங்களை ஆய்வு செய்தபோது மெரினாவில் உள்ள கடலோர பாதுகாப்புப் படை, கல்பாக்கம் அணுமின் நிலையம், காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், கோயம்பேடு காய்கறி மார்க்கெட், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, தரமணியில் உள்ள டைடல் பார்க், பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், வண்டலூரில் உள்ள தேசிய சிறப்பு பாதுகாப்பு படை மையம் உள்பட பல இடங்கள் இருப்பது தெரிந்தது.

12 இடங்களின் போட்டோக்கள்

இதன் மூலம் அருண், சென்னையில் 12 இடங்களை தீவிரவாதிகள் தகர்க்கும் வகையில் படங்களை எடுத்து கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் கடல் வழியாக ஊடுருவி மும்பை பாணியில் தாக்குதல் நடத்துவதற்கான வழிகளையும் அருண் வீடியோ காட்சிகளாக எடுத்து இ மெயில் சேர்த்து வைத்துள்ளான். இதன் மூலம் ஐ.எஸ்.ஐ.யும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சென்னைக்கு குறி வைத்து இருப்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அருணுக்கு கொடுக்கப்பட்ட 2 பணிகள்

தென்னிந்தியாவில் இந்திய ராணுவத்தின் பலம் குறித்த தகவல்களை சேகரிப்பது, தாக்குதல் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது ஆகிய இரண்டும்தான் அருணுக்கு கொடுக்கப்பட்ட பணிகள்.

ராணுவ பலம்

ராணுவ பலத்தை அறிய சென்னை அடையாறு கடற்படை தளம், கொச்சி கடற்படை தளம், விசாகப்பட்டினம் நீர்மூழ்கி கப்பல் தளம், பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம் போன்ற தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் இவற்றில் எந்த பகுதியையும் முழுமையாக புகைப்படம் எடுக்கவோ, தகவல் சேகரிக்கவோ அருணால் முடியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் என்பது அவரது லேப்டாப்பில் இருந்த போட்டோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ரூ. 2 கோடி பணம்

இந்த பணிகளை செய்வதற்குத் தான் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு வங்கி மூலம் ரூ.2 கோடி பணத்தை அருணுக்கு வழங்கியுள்ளது பாகிஸ்தான் உளவுத்துறை.

நீர்மூழ்கி கப்பல் விவரம்

விசாகப்பட்டினத்தில் ‘அரிஹந்த்' என்ற அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா கட்டி வருகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய தகவல்களை திரட்டித் தருமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் அருணிடம் கேட்டுள்ளனர். இதற்காக ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்துக்கு 2 முறை அருண் சென்று வந்துள்ளார். ஆனால், அவரால் விசாகப்பட்டினத்தில் உள்ள நீர்மூழ்கி கடற்படை தளம் அருகே கூட செல்ல முடியவில்லை.

4 பேர் எங்கே?

அருணின் இந்த செல்போன் எண்ணுக்கு சந்தேகத்துக்கு இடமான அழைப்புகள் அதிகமாக வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அருண் செல்வராஜன் வசித்துவந்த வீட்டுக்கு 4 இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்களுக்கும் உளவுப் பணியில் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர். இதனால் அவர்களையும் பிடிக்கும் பணியில் தற்போது இறங்கியுள்ளனர். அவரது இ-மெயில் முகவரியிலும், மொபைல் எண்ணிலும் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் விமான பயிற்சி

சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றிருக்கிறார் அருண். இதற்காக அவர் கொடுத்திருந்த சில விண்ணப்பங்களின் நகல்கள் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்தன. அருணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் உத்தரவின் பேரில்தான் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்ததாக கூறியிருக்கிறார்.

போலி ஆவணங்கள்

விமானம் ஓட்ட பயிற்சியில் சேர அருண் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதையும் அதிகாரி கள் கண்டுபிடித்துள்ளனர். அருணிடம் இருந்து மேலும் பல முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில்

அருண் செல்வராஜன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மீண்டும் கொழும்பு சென்ற நிலையில், அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உளவுப் பிரிவில் அருண் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சில நாட்கள் விடுதலைப் புலிகளிடத்தில் அவர் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களைக் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

மேலும் விசாரணை

அருண் செல்வராஜனை விசாரிக்க ரா, ஐ.பி. போன்ற பல்வேறு புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டால், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், தமிழகத்தில் பதுங்கியுள்ள மற்ற ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் குறித்தும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்கள் குறித்தும் தெரிய வரும் என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகிறார்கள்.

போலீஸ் காவலில் விசாரிக்க மனு

இந்த நிலையில் நீதிமன்றக் காவலில் உள்ள அருண் செல்வராஜனை 7 நாள்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய தேசியப் புலனாய்வு போலீஸார், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

மனுவைப் பெற்று கொண்ட நீதிபதி மோனி, "16-ஆம் தேதி செல்வராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதன் பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கான கால அவகாசம் அறிவிக்கப்படும்' என்றார் நீதிபதி.

கல்பாக்கம் அணுமின்நிலையம்

இதனிடையே அருண் செல்வராஜனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தமிழகத்தின் 20 இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய கடலோர காவல் படை, கமாண்டோ பிரிவு உள்ளிட்ட அமைப்பினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

அணுமின் நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் அதன் வளாகப் பகுதிகளில் கண்காணி‌ப்புக் ‌கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும், அணுமின் நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

English summary
This spy story is getting heady. Arun Selvarajan, the suspected ISI agent from Colombo arrested by National Investigation Agency (NIA) on Tuesday in Chennai, had sneaked into the Officers Training Academy (OTA) in the city posing as a bartender in August 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X