For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரா ஒலிம்பிக்கில் தங்கம்: மாரியப்பன் ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேல். தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்ததை மாரியப்பனின் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மூத்த மகன் மாரியப்பன்,21. பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

இன்று அதிகாலையில் தொலைக்காட்சியில் அந்த தருணத்தைப் பார்த்த கிராம மக்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாயார் ஆனந்தக்கண்ணீர்

தாயார் ஆனந்தக்கண்ணீர்

மகன் தங்கம் வென்றது குறித்து அவரது தாயார் சரோஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நான் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்.எனது கணவர் தங்கவேலு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். எங்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன்தான் மாரியப்பன். அவனுக்கு 5 வயதில் காலில் காயம் ஏற்பட்டது.

பணம் கொடுத்து உதவி

பணம் கொடுத்து உதவி

அவனுக்கு படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். ஆனால் என்னால் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை. ஊர் ஊராக சென்று காய்கறி விற்பதில் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவே கஷ்டமாக இருந்தது. அவனுக்கு பலர் உதவி செய்தனர். பெங்களூரைச் சேர்ந்தவர்களும், அவனுடன் படித்தவர்களும் ஆசிரியர்களும் , ஊர் மக்களும் 100 முதல் ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவினர்.

பதக்கம் வென்று சாதனை

பதக்கம் வென்று சாதனை

கடந்த 2012ம் ஆண்டு முதல் அவன் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வருகிறான். தற்போது நடந்த பாரா ஒலிம்பிக்கில் அவன் தங்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே அவன் வட்டார அளவில் இருந்து மாநிலம் வரை நடந்த போட்டி களில் வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்று இருக்கிறான். ஏற்கனவே இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று இருக்கிறான்.

நல்ல உள்ளங்களுக்கு நன்றி

நல்ல உள்ளங்களுக்கு நன்றி

தற்போது பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று எனக்கும் அவன் பிறந்த ஊருக்கும் மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்து விட்டான். இன்னமும் நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். நல்ல உள்ளங்களின் உதவியால் அவன் இந்த சாதனையை படைத்து இருக்கிறான். அவனுக்கு உதவிய உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சாதனை மகன்

சாதனை மகன்

அவன் படிக்க சென்ற போது விடுமுறை நாட்களில் கட்டிட வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் கூலிப்பணம் ரூ.200ஐ என்னிடம் கொடுத்து நீ காய்கறி விற்க போக வேண்டாம் என்று கூறுவான். அப்படிப்பட்ட அவன் இன்று படைத்த சாதனையை ஊக்குவிக்கும் வகையில் அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

English summary
Mariyappan Thangavelu winning high jump gold in RioParalympics trickled in.His family members and friends, including his mother Sarojaand father Thangavelu, erupted in joy after watching live his gold winning effort in high jump, thereby becoming the first Indian and first from Tamil Nadu to win a gold in Paralympics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X