11 மாடிக் கட்டட மீ்ட்புப் பணியில் ஈடுபட்டோருக்கு ஜெ. இன்று பரிசு, பாராட்டு
சென்னை: சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் மீட்புப் பணியை இரவு பகலாக மேற்கொண்டவர்களுக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கவுள்ளார்.
ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் திடீரென்று சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர், 88 பேர் காயமடைந்தனர். முதல்வர் ஜெயலலிதா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார்.
இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர், போலீஸார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இரவு பகலாக, மழை வெயிலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மீட்புப் பணி நடந்தது.

இவர்களின் முயற்சியால் 27 பேர் உயிருடன் மீிட்கப்பட்டனர். ஒரு காகமும், நாயும் கூட உயிருடன் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்டோரை முதல்வர் ஜெயலலிதா கெளரவிக்கவுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 8-ந் தேதி (இன்று) பிற்பகல் 2.45 மணிக்கு, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், காஞ்சீபுரம் மாவட்டம் மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து, முதல்வரின் உத்தரவின் பேரில், மீட்பு பணி நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த மீட்பு பணி குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.